நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி மதிப்பீட்டு குளறுபடிகள் உள்ளிட்ட கல்வித் துறை தொடர்பான பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் நீண்டகால உண்ணாவிரதத்தில் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்தபடியே தனது போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில், ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு டெல்லி காவல்துறை முன்கூட்டியே அனுமதி மறுத்ததுடன், ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரை குவித்தது.
இதையும் படிங்க: இன்றே உண்ணாவிரதத்தை முடிப்பார்..! சோனம் வாங்சுக் மனைவியின் பரபரப்பு அறிவிப்பு
தடுப்புகளை மீறி பேரணியை தொடங்க முயன்ற சிலரைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டதுடன், சில மெட்ரோ நிலையங்களும் மூடப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர்.

இதற்கிடையில், சப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் பங்கேற்கும் வகையில் தற்காலிகமாக தன்னை மருத்துவமனையில் இருந்து வெளியே அனுமதிக்க வேண்டும் என்று சோனம் வாங்சுக் தனது சமூக வலைதள பதிவின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் செல்லப்பட்டார். கல்வித் துறையில் நிலவும் சீர்கேடுகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கல்வி தொடர்பான முறைகேடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்கும் வரையோ அல்லது நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்படும் வரையோ தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று சோனம் வாங்சுக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நிலவும் இந்த போராட்டம் தற்போது தேசிய அரசியல் மற்றும் கல்வி விவாதங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: NEET விவகாரம் தீவிரம்... ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்! போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி!