கோவையில் 6 வயது சிறுவனை கொடூரமாக அடித்துக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆண் நண்பருக்கு இரட்டை ஆயுள் தண்டனையையும் வழங்கி எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார்.
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் அருண் (38). இவரது மனைவி திவ்யா (32) இவர்களுக்கு அபிஷேக் (6) மற்றும் ஹிர்சினி (3) ஆகிய குழந்தைகள் இருந்தனர். திவ்யா அடிக்கடி ஆண் நண்பர்களுடன் தொலைப்பேசியில் பேசி வந்ததால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு திவ்யா கணவரை பிரிந்து சாய்பாபாகாலணி கோவில்மேடு பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அப்போது தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜதுரை (35) என்பவருடன் திவ்யா பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஏப்19 ஆம் தேதி திவ்யா மற்றும் ஆண் நண்பர் ராஜதுரை ஆகிய இருவரும் சிறுவன் அபிஷேக்கை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த அபிஷேக்கை ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். விசாரணையில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் கேம்பயர், இசை நிகழ்ச்சிகளுக்கு தடை...ஸ்பார்ட் வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!
இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலணி போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜதுரை மற்றும் திவ்யா ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை எஸ்.சி. எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இருவரும் குற்றவாளிகள் என கடந்த 2 நாட்களுக்கு முன் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்நிலையில் தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது.
இதில் முதல் குற்றவாளியான ராஜதுரைக்கு இரட்டை ஆயுள் மற்றும் 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுவனின் தாய் திவ்யாவிற்கு ஒரு ஆயுள் மற்றும் 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து ராஜதுரை மற்றும் திவ்யா இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கோயில் கும்பாபிஷேகத்தில் ஒலிபெருக்கிகள்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!