ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து அனைத்து நாடுகளுக்கும் திறந்தே இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் வகையில் ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்து அவர் முக்கியமான தகவல்களை வெளியிட்டார்.
ஈரான் மிகவும் பலவீனமான நிலையில் இருந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் கூறினார். “ஈரானுடன் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அவர்களின் கடற்படை, விமானப்படை உள்ளிட்ட பெரும்பாலான வலிமைகள் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது எதுவுமில்லாத நிலையில் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வருகிறது” என்றார்.
அமெரிக்காவுக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஒன்று, ஈரானுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வது. மற்றொன்று, தாக்குதல் நடத்தி வேலையை முடிப்பது. இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழியாகும். இந்த வழித்தடம் அனைவருக்கும் திறந்திருக்கும். அமெரிக்கா அதை கண்காணிக்கும். ஆனால் எந்த நாடும் அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாது என டிரம்ப் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம் கானல்நீர்?!! நம்பிக்கை இழந்த உலக நாடுகள்!! நீடிக்கும் முரண்பாடு!
ஈரான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. பணவீக்கம் 250 சதவீதத்தை எட்டியுள்ளது. ஈரான் நாணயத்தின் மதிப்பு முற்றிலும் சரிந்துவிட்டது.

ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்று டிரம்ப் வலியுறுத்தினார். “அவர்கள் அதை உடனடியாக பயன்படுத்திவிடுவார்கள். இது நமக்காக மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துக்கும் நல்லது” என்றார்.
எந்தவித பொருளாதார சலுகைகளும் இன்றி, ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அந்த யுரேனியத்தை ரஷ்யா அல்லது சீனாவிடம் ஒப்படைப்பதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில் ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா முயற்சி எடுத்து வருவதாகத் தெரிகிறது. டிரம்பின் இந்த அறிவிப்பு உலக எண்ணெய் சந்தை மற்றும் கப்பல் போக்குவரத்தில் நிலையான அமைதியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் மீதான அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
உலகப் பொருளாதாரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். இருப்பினும், ஈரான் அணு ஆயுதத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முடிவுக்கு வரும் என்பதை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையே எங்க கண்ட்ரோல்ல தான் இருக்கு!! ஈரான் ஜெயிக்காது! அடித்து சொல்லும் அதிபர் ட்ரம்ப்!