வாட்ஸ்அப் மூலம் வந்த ஒரு முதலீட்டு தகவலை நம்பி, 70 வயதான ஆடிட்டர் ஒருவர் ரூ.21 கோடிக்கும் அதிகமான பணத்தை இழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிப்டோகரன்சி மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து, பல மாதங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடியில் அவர் சிக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த அசோக் விஜயவர்க்கியா, ஆடிட்டராக பணியாற்றி வருவதுடன், மாநில வர்த்தக மற்றும் தொழில் துறை சபையின் தலைவராகவும் உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு தன்னை முதலீட்டு ஆலோசகர் என அறிமுகப்படுத்திய பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். கிரிப்டோகரன்சி மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, ஒரு இணையதள இணைப்பை அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 'ஆப்ரேஷன் சைஹாக் 5.0' 48 மணி நேரத்தில் 916 சைபர் குற்றவாளிகள் கைது! டெல்லி போலீஸ் அதிரடி
அதை நம்பிய அசோக் விஜயவர்க்கியா, அந்த இணையதளத்தில் கணக்கு தொடங்கி ஆரம்பத்தில் குறைந்த தொகையை முதலீடு செய்தார். அவருக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், முதலீட்டுக்கு அதிகமாக லாபம் கிடைத்ததாக காட்டப்பட்டதுடன், ரூ.1.88 லட்சம் வரவு வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தொடர்ந்து அதிக தொகைகளை முதலீடு செய்யத் தொடங்கினார்.

பின்னர், இணையதளத்தில் அவரது முதலீட்டுக்கு ரூ.33 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்ததாக காட்டப்பட்டது. இதை உண்மையென நம்பிய அவர், தனது சொந்த சேமிப்பு மட்டுமின்றி, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தும் பணம் பெற்று முதலீடு செய்துள்ளார். ஏழு மாதங்களில், நான்கு வங்கிக் கணக்குகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.21.06 கோடி மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், முதலீட்டு தொகையையும் லாபத்தையும் திரும்பப் பெற முயன்றபோது, வரி, கமிஷன் மற்றும் செயலாக்கக் கட்டணம் என்ற பெயரில் மேலும் ரூ.10.34 கோடி செலுத்த வேண்டும் என்று மோசடி கும்பல் வற்புறுத்தியுள்ளது. இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அசோக் விஜயவர்க்கியா போலீசில் புகார் அளித்தார். இதுவரை ரூ.2 கோடி மட்டுமே முடக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!