தேசத்தின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதில் மாணவர்கள் எப்போதும் முன்னிற்க வேண்டும் என்றும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு செயல்படுவதற்குச் சிறிது காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்குத் தமிழக ஆளுநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் சம்பத் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த பாஜக தொண்டர்களைக் கண்டதும், காரில் இருந்து இறங்கிச் சென்று அவர்களின் அன்பான வரவேற்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது பல ஆண்டுகளாக நமது தாய்மார்களின் பிரசவ காலத்தில் அவர்களுக்கு முழுமையான மற்றும் உயர்தரமான மருத்துவச் சிகிச்சையை வழங்கி வரும் முதன்மை நிறுவனமான ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நான் கோவை வந்துள்ளேன்.
இதையும் படிங்க: நான் ஹாப்பியா இருக்கேன்... ஜெயில்ல 25 BOOKS இருக்கு... சிறைக்குச் செல்லும் முன் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சு..!
கோவைக்கும் தமிழ்நாட்டிற்கும் வருவதென்பது எனக்கு எப்போதும் தனி மகிழ்ச்சியையும் பூரிப்பையும் அளிக்கும் விஷயம். தொலைக்காட்சிகள் வாயிலாகத் தமிழக மக்கள் அனைவருக்கும் தனது அன்பையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் மற்றும் அரசு பேச்சுவார்த்தை நடத்தாதது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இது அரசியல் சார்ந்த கேள்வி, இதற்கு உரிய பதிலை அரசியல் தலைவர்களே அளிப்பார்கள் என்று கூறிப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
மாணவர்கள் எப்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்திய தேசம் இன்று சர்வதேச சக்திகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வல்லமையோடு திகழ்கிறது என்றால், அதற்கு நமது ஒற்றுமையே முக்கியக் காரணம்.
தமிழகத்தின் தற்போதைய புதிய அரசு குறித்த கேள்விக்குச் சுருக்கமாகப் பதிலளித்த அவர், "புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சிறிது காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது" என்று கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: கிறிஸ்தவர்களிடையே சாதிய பாகுபாடு... புள்ளி விவரத்துடன் சி.எம். விஜய்க்கு பறந்த முக்கிய கோரிக்கை...!