கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக திமுக தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனு மீது, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக கரைவதால் ஆபத்து திமுகவுக்குத்தான்!! மு.க.ஸ்டாலின் டேபிளுக்கு போன ரகசிய சர்வே! பதற்றத்தில் அறிவாலயம்!
அந்த மனுவில், சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதவ், டி. நிர்மல்குமார் அல்லது இந்த வழக்குடன் தொடர்புடைய வேறு யாரும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சுதந்திரமான விசாரணையை பாதிக்கும் வகையிலோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, திமுக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல் துறைக்கு எதிராக ஒரு பொய்யான கதையை உருவாக்குவதோடு, ஒரே நேரத்தில் பொதுமக்களின் கருத்தை திசை திருப்பவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி நடத்தப்படும் ஒரு விசாரணையில் தலையிடவும் முயல்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு மாநில அரசுக்கு உரிமை இருந்தாலும், சிபிஐ விசாரணையின் நேர்மையை உறுதி செய்யவும், சாட்சிகளின் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மட்டுமே ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ள முதலமைச்சரின் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ். பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அகமது உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், மனுவை நாளை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
ஆதவ் அர்ஜுனா சொன்னது என்ன?
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கரூர் விஷயத்தில் நடந்த கணக்கு வழக்கு இன்னும் முடியவில்லை. அந்த கணக்கு வழக்கை முடிக்காமல் விடமாட்டோம். எங்கள் தலைவர் விஜய் மீது கை வைத்தீர்களே உங்களை விடமாட்டோம். போலீசாரை வைத்து மக்களை கொன்று குவித்தீர்களே? அதற்கான எல்லா உண்மைகளும் வெளியே வரும் என ஆவேசமாக பேசிருந்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கு அச்சாரம் போடும் சீமான்!! திருமண விழாவில் உதயநிதியை கட்டியணைத்து பாராட்டி சிக்னல்!?