தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களும் நாளை (டிசம்பர் 31) மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 1) ஆகிய இரண்டு நாட்கள் செயல்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் காரணமாக இந்த தற்காலிக விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தை ஒட்டி ஆதார் திருத்தம் மற்றும் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக மையங்களுக்கு வரத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள், இந்த அறிவிப்பைக் கருத்தில் கொண்டு தங்களது பணிகளைத் திட்டமிடுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் இந்நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் அனைத்து அரசு இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில் வருடாந்திர மென்பொருள் பராமரிப்பு (Software Maintenance) மற்றும் தணிக்கை பணிகள் (Auditing) நடைபெற உள்ளன. இதன் காரணமாக, வரும் 31.12.2025 மற்றும் 01.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மேற்படி மையங்கள் அனைத்தும் முழுமையாகச் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலையாள திரையுலகில் சோகம்! நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்! பிரபலங்கள் அஞ்சலி!

இ-சேவை மையங்கள் வாயிலாக இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகளைப் பெறுபவர்களும், ஆதார் மையங்களில் புதிய சேர்க்கை மற்றும் முகவரி மாற்றப் பணிகளை மேற்கொள்ள விரும்புபவர்களும் இந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மையங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பராமரிப்புப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, வரும் 02.01.2026 (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து மையங்களும் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் பொது மேலாளர் உறுதி அளித்துள்ளார். புத்தாண்டு விடுமுறை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இந்தத் தற்காலிக சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: பயணிகள் கவனத்திற்கு! மாறுகிறது மின்சார ரயில் நேரம்! - ஜனவரி 1 முதல் புதிய அட்டவணை அமல்!