தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் பல வீடுகளில் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு குறைந்த மின்னழுத்தம் எனப்படும் ‘லோ வோல்டேஜ்’ பிரச்னையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றபோது, பல வீடுகளில் வழக்கமான கட்டணத்தை விட அதிக தொகை வந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, சுமார் 9.60 லட்சம் வீடுகளில் கடந்த மே மாதத்தை ஒப்பிடும்போது ஜூலை மாத மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், சுமார் 3.70 லட்சம் வீடுகளில் மூன்று மடங்குக்கும் அதிகமாக மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மின் பயன்பாடு கணக்கெடுப்பில் ஏற்பட்ட காலதாமதம் முக்கிய காரணமாக இருந்தாலும், சில பகுதிகளில் ஏற்பட்ட குறைந்த மின்னழுத்த பிரச்னையும் மின் நுகர்வு அதிகரிக்க காரணமாக இருந்ததாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திடீரென எகிறிய மின்கட்டணம்! மின்வாரியமே ஒப்புக்கொண்ட குளறுபடி! தமிழகம் முழுவதும் களஆய்வுக்கு உத்தரவு!

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஒரு டிரான்ஸ்பார்மரின் திறனுக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால், அதைவிட அதிகமான இணைப்புகளுக்கு மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டால், வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் விசிறி, மிக்ஸி, மோட்டார் பம்ப் உள்ளிட்ட சாதனங்கள் வழக்கத்தை விட அதிக மின்சாரம் எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகும். இதனால் சராசரியாக 10 சதவீதம் வரை கூடுதல் மின் பயன்பாடு ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக மின் கட்டணம் வந்த வீடுகளில் மீட்டர் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதுடன், அந்த பகுதிகளில் உள்ள மின் விநியோக கட்டமைப்புகளையும் ஆய்வு செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. குறைந்த மின்னழுத்த பிரச்னை கண்டறியப்பட்டால், புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாத மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், மின்வாரியத்தின் இந்த ஆய்வு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: திடீரென எகிறிய மின்கட்டணம்! மின்வாரியமே ஒப்புக்கொண்ட குளறுபடி! தமிழகம் முழுவதும் களஆய்வுக்கு உத்தரவு!