தமிழகத்தின் புதிய ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) இன்று பதவியேற்றுக்கொண்ட திரு. ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தனது பதவியேற்பு விழாவிற்குப் பிறகு சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
கோயிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்லேகர், "இது வீரத் தமிழர்கள் மற்றும் சோழப் பேரரசர்கள் ஆண்ட புண்ணிய பூமி. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணில் ஆளுநராகப் பணியாற்றுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆளுநருடன் அவரது மனைவி திருமதி. அனகா ஆர்லேகர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர். அவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

முன்னதாக இன்று காலை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் (லோக் பவன்) நடைபெற்ற விழாவில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஸ்ருத் அரவிந்த் தர்மாதி காரி அவர்கள் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆர்லேகருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் எம். அப்பாவு மற்றும் அமைச்சர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கேரளா ஆளுநராக உள்ள ஆர்லேகருக்குத் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவாவைச் சேர்ந்த ஆர்லேகர், ஏற்கனவே இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: UPSC தேர்வு முடிவுகள் 2026... டாப் 10-ல் இரண்டு தமிழர்கள்! ராஜேஸ்வரி 2-ம் இடம் பிடித்து சாதனை!