விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், திமுக-வின் மாவட்டச் செயலாளர் செய்யும் வேலையைச் செய்து கொண்டிருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஒரு காலத்தில் பெரிய போராளியாகப் பார்க்கப்பட்ட திருமாவளவன், இன்று தனது கொள்கைகளைச் சமரசம் செய்துகொண்டு திமுகவிடம் சரணடைந்துவிட்டதாக நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், "அண்ணன் திருமாவளவன் மீது எங்களுக்குப் பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஒரு காலத்தில் திமுக-வை ஒழிப்பேன் என்று கூறி 'மக்கள் நலக் கூட்டணி' அமைத்துப் போராடியவர் அவர். ஆனால், இன்று அந்தப் போராட்ட வலிமையை இழந்து, ஒரு சமரச அரசியலுக்கு (Compromised Politics) வந்துவிட்டார். நேற்றைய கூட்டத்தில் எங்கள் தலைவர் விஜய்யைப் பற்றி அவர் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. அவர் யாருக்காக அரசியலுக்கு வந்தாரோ, அந்தப் பட்டியலின மக்களுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்? தற்போது 18,000 செவிலியர்கள் தெருவில் நின்று போராடுகிறார்கள், அதில் ஆயிரக்கணக்கானோர் பட்டியலினத்தவர்கள். அவர்களுக்காகவோ அல்லது TET தேர்ச்சி பெற்றுப் பணிக்குக் காத்திருப்பவர்களுக்காகவோ குரல் கொடுக்கத் துப்பில்லாத திருமாவளவன், திமுக-விற்காக முட்டுக்கொடுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து விசிக-வின் நிலை குறித்துப் பேசிய அவர், "சுயமரியாதை மீட்பேன் என்று கூறி கட்சியைக் தொடங்கியவர், இன்று தனது இயக்கத்தையும் தொண்டர்களையும் திமுக-விடம் அடமானம் வைத்துவிட்டார். திமுக மேடைகளில் விசிக நிர்வாகிகளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். ஒரு போராளியாகப் புறப்பட்டவர், இன்று திமுக ஏவிவிடும் பூனையாக மாறிவிட்டார் என்பதுதான் கசப்பான உண்மை. திமுக-வின் மாவட்டச் செயலாளர் செய்ய வேண்டிய வேலையைச் செய்வதன் மூலம் அவர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டார். இனிமேலாவது அவர் எதற்காக அரசியலுக்கு வந்தார் என்பதை உணர்ந்து பேச வேண்டும்" என விமர்சித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் இந்தத் தாக்குதல், திமுக கூட்டணியில் உள்ள விசிக-வினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் முடியுமா?" – வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!
இதையும் படிங்க: "அதிமுக - திமுக ரகசியக் கூட்டணி?" அதிமுகவின் முகத்திரையை கிழித்த தவெக நிர்மல்குமார்!!