திருத்தணியில் கத்தியுடன் ரீல்ஸ் எடுத்ததை தட்டி கேட்ட வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணியில் வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், தமிழிளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது என்றும் அத்தனை சமூக அவலங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் கையாலாகாத்தனம் வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் தனது கண்டனத்தை கூறினார்.
இதே போல பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை 'ரீல்ஸ்' என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் என்று கூறினார் .
இதையும் படிங்க: பாஜக கூட கூட்டணி வச்சு எம்.எல்.ஏ ஆனது யாரு? நானா? திருமாவளவனா? சீமான் கிடுக்குப்பிடி கேள்வி!
இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்தார். இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திருமாவளவன் திமுகவின் பிள்ளையா? விஜயையும், சீமானையும் சீண்டிய விவகாரம்! குஷ்பு விளாசல்!