திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி இருவரும் ஜாமீன் கேட்டு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஜாமீன் வழங்கக் கூடாது என ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று இருதரப்பு வாதம் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டுள்ளார். மாமியார் சித்ராதேவி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, ரிதன்யாவின் கணவர், மாமனார் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார். இது எங்களுக்கு முதற்கட்ட ஆறுதலாக உள்ளது. மேலும், எனது மகள் ரிதன்யாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. நீதிமன்றத்திற்கும், நீதிபதிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இதையும் படிங்க: ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல, அது திட்டமிட்ட கொலை.. சாட்டையை சுழற்றிய சீமான்..!
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் மோகன்குமார், ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் தெரியவரும் என்றார்.
இதையும் படிங்க: வேதனையின் உச்சத்தில் ரிதன்யாவின் தந்தை எடுத்த அதிரடி முடிவு... வழக்கறிஞர் பரபரப்பு தகவல்...!