திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சர்ச்சை தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்ற உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு சிலரால் மத ரீதியானது என்று விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இண்டி கூட்டணி (I.N.D.I.A bloc) எம்.பி.க்கள் ஆவேசமடைந்தனர். நீதிபதி மத ரீதியாக செயல்படுவதாக கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் இம்பீச்மெண்ட் நோட்டீஸ் அளித்தனர்.
இந்த சூழலில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக ஜாதி, மத ரீதியில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மணி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு (PIL) தொடர்ந்தார். மனுவை ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இதற்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசு, டிஜிபி, சென்னை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஓயாத திருப்பரங்குன்றம் சர்ச்சை! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்! ஹைகோர்ட் அதிரடி தடை!
தமிழக டிஜிபி வெங்கட்ராமன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளது:

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், அவதூறு பரப்பியவர்கள் அனைவருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
ஐகோர்ட் நீதிபதி மீது அவதூறு பரப்பும் வகையிலான புத்தகங்கள், சுவரொட்டிகள், அறிக்கைகள் வெளியிடக் கூடாது என்று மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர்கள் குறித்த தகவல்களை கேட்டு, சென்னை போலீசின் சைபர் குற்றவியல் பிரிவு சம்பந்தப்பட்ட சமூக ஊடக தலைமைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அவர்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பானது. நீதிபதி உத்தரவை அரசு நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்கு எழுந்தது. பின்னர் டிவிஷன் பெஞ்ச் உத்தரவை உறுதி செய்தது. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் போலீஸ் நடவடிக்கை குறித்த பதில் வந்துள்ளது.
இது நீதித்துறை சுதந்திரம், அரசியல் தலையீடு, சமூக ஊடக அவதூறு ஆகியவற்றை மீண்டும் விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் இந்த விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: 3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு