தொழிலாளர் நல வாரியங்கள் தொடர்பான 50 ஆண்டு கால நீண்டகாலக் கோரிக்கைகளைப் படிப்படியாக நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது ஃபர்வேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்கம் சார்பில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டிற்கான புதிய பயிற்சிகள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது ஃபர்வேஸ் கலந்துகொண்டு பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்குத் தேவையான சீருடைகளை வழங்கினார்.

தொடர்ந்து, பல்வேறு முன்னணித் தொழில் நிறுவனங்களில் வளாக நேர்காணல் மூலம் தேர்வாகிப் பணிபுரிய வாய்ப்பு பெற்றுள்ள தொழிற்பயிற்சி மாணவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு திறன் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும், தங்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் 100% மாணவர் சேர்க்கையை முழுமையாக உறுதி செய்த தொழிற்பள்ளி முதல்வர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிங்க: கோவை என்ன பாகிஸ்தானா?... தேசியக்கொடி வழக்கில் தமிழக காவல்துறையை விளாசிய நீதிபதி...!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முகமது ஃபர்வேஸ், தொழில் துறைத் தேவைகளுக்கு ஏற்பவும் வேலைவாய்ப்புகளை எளிதில் பெறும் வகையிலும் தொழிற்சார்ந்த பாடத்திட்டங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், தொழிலாளர் நலத் துறையின் கீழ் 20-க்கும் மேற்பட்ட நல வாரியங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் தொழிலாளர்களின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை அரசு படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் பாஜகவுக்கு ரிட்டன்.. 25 முக்கிய நிர்வாகிகள் அதிரடி முடிவு.. சைலண்ட்டாக சம்பவம் செய்த நயினார்!!