வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் அனைத்துத் தமிழர்களையும் எவ்வித அசம்பாவிதமுமின்றிப் பத்திரமாக மீட்டுத் தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை நேரில் சந்தித்துத் தமிழக அமைச்சர்கள் குழுவினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நேபாளப் பேரிடரில் சிக்கியுள்ள தமிழக மக்களை விரைவாக மீட்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் டெல்லிக்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை அமைச்சர்கள் குழுவினர் நேரில் சந்தித்து மிக விரிவான ஆலோசனையை மேற்கொண்டனர்.

இச்சந்திப்பின் போது, நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாகத் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு ஆங்காங்கே முடங்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அமைச்சர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், இந்தியத் தூதரகம் மற்றும் நேபாள பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து வான்வழியாக ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்றும், மீட்கப்படும் நபர்களை உடனடியாக இந்திய எல்லைக்கு அழைத்து வந்து பாதுகாப்பாகத் தாயகம் அனுப்புவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர்கள் குழு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: விடிந்ததுமே பேரிடி... உலகையே உறைய வைத்த நேபாளம் பேரழிவு... காணாமல் போனவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்...!
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உடனடி மருத்துவ உதவிகள், உணவு மற்றும் இருப்பிட வசதிகளை உறுதி செய்வதுடன், தமிழக அரசு அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறையுடன் தொடர் தொடர்பில் இருந்து உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறைச் செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசின் இந்த அவசரக் கோரிக்கையைப் பரிசீலித்த வெளியுறவுத்துறைச் செயலாளர், நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் விரைந்து மீட்க முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி சென்றடைந்தது தமிழக அமைச்சர்கள் குழு... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு...!