தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழைக் காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளிக் குழந்தைகள் மத்தியில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவக்கூடிய அபாயகரமான நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், அனைத்துப் பள்ளி வளாகங்கள் மற்றும் கல்வி அலுவலகங்களில் ஒவ்வொரு புதன்கிழமையும் போர்க்கால அடிப்படையில் 'மிஷன் மோட் மாபெரும் தூய்மைப் பணியை' (Mission Mode Mass Clean-up) சமரசமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இணைந்து அதிரடி வழிகாட்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை அரசுச் செயலாளரின் நேரடி உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ள இந்த விரிவான செயல்முறை நெறிமுறைகளில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO), மாவட்டக் கல்வி அலுவலர்கள் (DEO), வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEO) மற்றும் அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கிச் செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் கழிவு இல்லை, நீர்த்தேக்கம் இல்லை, கொசு உற்பத்தி இல்லை என்ற முழக்கத்தை முழு இலக்காகக் கொண்டு தூய்மைப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், பள்ளி வளாகங்களில் தேங்கிக் கிடக்கும் பயன்படாத பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் கொள்கலன்கள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் குப்பைகளை புதன்கிழமை தோறும் தீவிர ஆய்வு நடத்தி உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாடே அதிரும் கொடூர வழக்கு..! திமுக கப்சிப்..! வாய தொறங்க ஸ்டாலின்..! தவெக தாக்கு..!!

மேலும், பள்ளிக் கட்டடங்களின் மொட்டை மாடிகள், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள், மதிய உணவு சமையலறை, விளையாட்டு மைதானங்கள் மற்றும் கட்டடங்களின் பின்புறப் பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிப்பதுடன், நிலத்தடி மற்றும் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகளைக் கொசுக்கள் நுழையாதவாறு காற்றுப்புகாத மூடிகளால் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர் மழையால் ஈரப்பதத்துடன் காணப்படும் பள்ளியின் பழுதடைந்த சுற்றுச்சுவர்கள், மேற்கூரைகள், தாழ்வாரங்கள் மற்றும் சன்ஷேடு சுவர்களின் உறுதித்தன்மையை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், ஏதேனும் கட்டடங்கள் அல்லது வகுப்பறைகள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டால், மாணவர்களின் நலன் கருதி அவற்றை உடனடியாகப் பூட்டி 'சீல்' வைக்க வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் கழிவுநீர் கால்வாய்களை அகற்றுதல், மொட்டை மாடி மற்றும் மேற்கூரைகளைச் சுத்தம் செய்தல், கூர்மையான கண்ணாடி அல்லது ஆபத்தான இரும்புப் பொருட்களை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளில் நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பெரியவர்களைக் கொண்டே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பள்ளி மாணவர்களுக்குச் சளி, இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், புதன்கிழமை தோறும் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் கள அறிக்கைகளை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகம் வழியாக இயக்ககத்திற்குத் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா.? செப்.26 ல் ஆர்ப்பாட்டம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு.!