அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், தேர்தல் அமைப்பில் பெரும் மாற்றங்களை கொண்டு வர விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது பெரும் மோசடிகள் நடந்துள்ளதாகவும், ஓட்டுகள் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளமான எக்ஸ்-இல் பதிவிட்டுள்ள டிரம்ப், "நமது தேர்தலைப் பார்த்து உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது. நாம் அவற்றை சரிசெய்யப் போகிறோம். இல்லையெனில் நமக்கு இனி ஒரு நாடு இருக்காது" என்று எச்சரித்துள்ளார்.
டிரம்ப் தனது பதவியேற்பு முதல் நாளிலிருந்தே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலக நாடுகளுக்கு வரி விதிப்பது, வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகள் மீது ராணுவ தாக்குதல்கள் நடத்துவது போன்ற செயல்களால் சர்ச்சையை கிளப்பியவர்.
இதையும் படிங்க: குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி!! இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு!
தற்போது தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வர விரும்புகிறார். அவரது பதிவில், "குடியரசுக் கட்சியினர் அனைவரும் போராடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்காவைக் காப்பாற்றுங்கள். சட்டம் அவசியம்" என்று கூறியுள்ளார்.
டிரம்ப் முன்மொழிந்த சீர்திருத்தங்கள்: ஓட்டுப்பதிவின்போது அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். குடியுரிமை சான்று கட்டாயம். நோய்வாய்ப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்றவர்களுக்கு அஞ்சல் வழி ஓட்டு (மெயில்-இன் பேலட்) இல்லை.

இந்த மாற்றங்கள் அமெரிக்க தேர்தல் அமைப்பை வலுப்படுத்தும் என்று டிரம்ப் நம்புகிறார். 2024 தேர்தலில் டிரம்ப் வென்றாலும், ஜனநாயகக் கட்சியினர் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். தற்போது அதிபரான டிரம்ப் இதை திருப்பி அவர்கள் மீது சாடியுள்ளார்.
அமெரிக்க தேர்தல் முறை உலக அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பல நாடுகள் அமெரிக்காவின் ஜனநாயகத்தை கேள்வி கேட்கின்றன. டிரம்பின் இந்த அறிவிப்பு குடியரசுக் கட்சியினரிடையே ஆதரவை பெற்றாலும், ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சி" என்று அவர்கள் விமர்சிக்கின்றனர். டிரம்ப் ஆட்சியில் அமெரிக்காவின் உள் அரசியல் சூழல் மேலும் சிக்கலாகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
டிரம்பின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் தேர்தல் சீர்திருத்தம் உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலின் நடிக்கிறாரா? எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!