மதுரை: மதுரை மற்றும் கோவை பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அடுத்தடுத்து 3 இண்டிகோ விமானங்கள் வானில் நீண்ட நேரம் வட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் வானிலை சீரானதும் விமானங்கள் பத்திரமாக தரையிறங்கின.
மதுரையில் நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல் கோவை பகுதியிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
மும்பையில் இருந்து மதுரைக்கு வந்த இண்டிகோ விமானம் மாலை 3.25 மணியளவில் தரையிறங்க வேண்டிய நிலையில், மோசமான வானிலை காரணமாக மதுரை வான்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதில் 167 பயணிகள் இருந்தனர். வானிலை ஓரளவு சீரானதும் விமானம் பாதுகாப்பாக மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதையும் படிங்க: லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

இதேபோல், ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த மற்றொரு இண்டிகோ விமானமும் சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமிட்டது. உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிக்கு மேலே விமானம் சுற்றியதாக கூறப்படுகிறது. இதில் 202 பயணிகள் பயணம் செய்தனர். பின்னர் விமானம் மதுரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதற்கிடையே, சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கும் மோசமான வானிலை காரணமாக சிக்கல் ஏற்பட்டது. கோவையில் இறங்க முடியாததால் விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது. அதில் அமைச்சர் வன்னியரசு உள்ளிட்ட 158 பயணிகள் இருந்தனர். மதுரையில் சிறிது நேரம் காத்திருந்த விமானம், வானிலை சீரான பிறகு மாலை 5.06 மணியளவில் கோவைக்கு புறப்பட்டுச் சென்றது.
அடுத்தடுத்து 3 விமானங்கள் வானில் வட்டமிட்டதால் விமானங்களில் இருந்த பயணிகளிடையே சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. எனினும், விமானிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளின் நடவடிக்கையால் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக தரையிறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: அரசியல் இயக்கமாகிறது வீ தி லீடர்ஸ்! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு! அரசியல் களத்தில் குதிக்கும் இளைஞர்கள்!