கனடாவுடனான வர்த்தக உறவு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். கனடாவின் அணுகுமுறை மிகவும் மோசமாக இருப்பதாக விமர்சித்த அவர், இனிமேல் கனடாவுக்கு எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படாது என்றும் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வாகன உற்பத்தித் துறையை மீட்டெடுத்ததில் தனது கொள்கைகள் முக்கிய பங்கு வகித்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த தொடக்க காலத்தில், டெட்ராய்டில் உள்ள பெரிய தொழிற்சாலையை மூட போர்டு நிறுவனம் திட்டமிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அப்போது தேர்தல் கருத்துக்கணிப்புகளில் தான் முன்னிலையில் இருந்ததைத் தொடர்ந்து, தொழிற்சாலையை தொடர்ந்து இயக்க நிறுவனம் முடிவு செய்ததாகவும் டிரம்ப் கூறினார். தற்போது அந்த ஆலை வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கி வருவதுடன், உலகின் அதிக லாபம் ஈட்டும் கார் உற்பத்தி ஆலைகளில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரானுடன் சமரசமா? போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
போர்டு மட்டுமின்றி ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் தனது வர்த்தகக் கொள்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் கூறினார். குறிப்பாக இறக்குமதி வரிகள் தொடர்பாக தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் அமெரிக்க வாகனத் தொழிலுக்கு புத்துயிர் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கனடா குறித்து கடுமையாக பேசிய டிரம்ப், அந்த நாட்டிலிருந்து கார்கள், உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். பல ஆண்டுகளாக கனடா அமெரிக்காவை சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும், இனி அதுபோன்ற நிலை தொடராது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வரும் கனடா நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் பிற செயல்பாடுகளை அமெரிக்காவுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார். அமெரிக்காவில் மீண்டும் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் முந்தைய தலைமைகளின் கொள்கைகளால் பல நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக குற்றம்சாட்டிய டிரம்ப், அவை மீண்டும் அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கனடாவுடனான வர்த்தக விவகாரத்தில் டிரம்பின் இந்தக் கடுமையான நிலைப்பாடு, வட அமெரிக்காவின் வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. அவரது அடுத்தகட்ட வர்த்தக நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது வர்த்தகப் போர்! கனடா பொருட்களுக்கு 50% வரி! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மார்க் கார்னி பதிலடி!