கடந்த ஜூன் 13 முதல் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்தப் போரின் முதன்மைக் காரணம், ஈரானின் அணு ஆயுதத் திட்டமாகும். இஸ்ரேல், ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதற்கு முன் அதன் அணு வசதிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கில், "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் ஜூன் 13 அன்று ஈரானின் அணு மற்றும் இராணுவ இலக்குகளைத் தாக்கியது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தத் தாக்குதல் ஈரானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக நடத்தப்பட்டதாகக் கூறினார்
இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மீது 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது, இதில் 24 பேர் உயிரிழந்தனர், 380 பேர் காயமடைந்தனர். ஈரானின் இந்தப் பதிலடி, இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பை பெரிதும் சோதித்தது. இதற்கிடையில், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜூன் 21 அன்று ஈரானின் மூன்று அணு வசதிகளை, பி-2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் "பங்கர் பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கியது. இந்தத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் "மகத்தான இராணுவ வெற்றி" என்று வர்ணித்தார்
ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து டெஹ்ரானில் உள்ள லவிசான் பகுதியில் பதுங்குகுழியில் தஞ்சமடைந்தார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஜூன் 16 அன்று ஃபாக்ஸ் நியூஸ் பேட்டியில், காமெனியைக் கொல்வது மோதலை முடிவுக்கு கொண்டுவரும் என்று கூறினார். ட்ரம்ப், ஜூன் 18 அன்று ட்ரூத் சோஷியல் தளத்தில், "காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும், ஆனால் இப்போதைக்கு அவரைக் கொல்ல மாட்டோம்" என்று மிரட்டல் விடுத்தார். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "டெஹ்ரான் எரியும்" என மிரட்டினார்.
இதையும் படிங்க: சுடுகாடாக மாறிவரும் காசா!! உணவுக்காக காத்திருந்தவர்கள் கொல்லப்படும் அவலம்! 800-ஐ கடந்த பலி எண்ணிக்கை!!

இந்த மிரட்டல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ட்ரம்பின் மிரட்டல்கள் "மரியாதைக் குறைவானவை" என்று கண்டித்தார். காமெனி, அமெரிக்காவின் தலையீடு "பேரழிவை" ஏற்படுத்தும் என எச்சரித்தார். இதை அடுத்தே ஈரான் கத்தாரில் உள்ள அல் உதைத் அமெரிக்க தளத்தை ஏவுகணைகளால் தாக்கியது.
இவ்வாறு மாறி மாறி தலைவர்கள் கொலை மிரட்டல் விடுத்துக் கொள்ளும் இந்த சமயத்தில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலிகாமெனியின் நெருங்கிய ஆலோசகரான ஜவாத் லாரிஜானி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
புளோரிடாவில் உள்ள டிரம்பின் சொகுசு பங்களாவான மார்-ஏ-லாகோவில் அவர் சூரிய குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய டிரோன் மூலம் தாக்கப்படலாம். அது மிகவும் எளிதானது எனக் கூறினார். இதற்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், உண்மையில் அது ஓர் அச்சுறுத்தலாக இருக்கலாம். நான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் செய்தேன். ஆனால் எனக்கு அதன்மீது ஆர்வம் ஏதுமில்லை என கிண்டலாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கெத்து காட்ட ட்ரம்ப் சொன்ன பொய்.. ஈரான் செய்த சம்பவம்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய அமெரிக்கா!