கடலூரில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட சுனாமி ஏற்பட்டதின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் கடலோர மாவட்டங்களை சுனாமி பேரலை தாக்கியது.
தமிழகத்தில் சுனாமி தாக்குதலால் 13 கடற்கரை மாவட்டங்களும் பெரிதும் சேதத்தை சந்தித்தன. இப்பேரலையில் சிக்கி கடலூர் மாவட்டத்தில் 617 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் மாயமாகினர். கடலோர கிராமங்கள் அழிந்தன. இப்பேரலையினால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து கடலோர மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை. இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு தினம் கடலோர மாவட்டங்களில் அனுசரிக்கப்படுகிறது.

இந்தாண்டு 21ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுனாமி நினைவுதினத்தை முன்னிட்டு மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் கடலூர் முதுநகர் சிங்காரதோப்பு மற்றும் தேவனாம்பட்டினம் கடற்கரை நோக்கி மலர்கள், பால்குடத்துடன் பேரணியாக சென்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: #BREAKING: கடலூர் கோர விபத்து… உரிய சோதனை செய்யாததால் நேர்ந்த துயரம்… பேருந்து ஓட்டுனர் அதிரடி கைது..!
பெண்கள் கொண்டு சென்ற பால்குடம் கடலில் கலக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்தும் போது பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதில் கடலூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பல்வேறு இடங்களில் சுனாமியால் இறந்தவர்களின் நினைவிடங்களுக்கு சென்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பேரதிர்ச்சி... EX. மத்திய அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்... அரசியல் கட்சியினர் இரங்கல்...!