திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இனி சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றிய பின்னர், அவர் ஆற்றிய உரையில் இந்த மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார்.

உலகப் புகழ்பெற்ற தார்மீக அறக்கட்டளையாகத் திகழும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சாதாரண பக்தர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 28 மாநிலங்களைச் சேர்ந்த 6,976 கலைஞர்கள் பங்கேற்று சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இதையும் படிங்க: பக்தர்கள் கவனத்திற்கு: ஏழுமலையான் தரிசனம் ரத்து! திருப்பதி கோயில் 10 மணி நேரம் மூடல்! வெளியான முக்கிய அறிவிப்பு!
வைகுண்ட ஏகாதசி விழாவின்போது முதன்முறையாக முதல் 3 நாட்களுக்கு குலுக்கல் முறையில் ஆன்லைன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 7 நாட்களும் சாதாரண பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. 10 நாட்களில் மொத்தம் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ரசப்தமி விழாவும் ஒருங்கிணைந்த துறைகளின் ஒத்துழைப்புடன் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏழுமலையான் பக்தர்களுக்கான தினசரி அன்னபிரசாதத் திட்டத்தின் கீழ் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சம் பக்தர்களுக்கு சுவையான, தரமான அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. திருமலையில் ஏடிஜி எச் முதல் ஆக்டோபஸ் வரையிலான வெளிப்புற வளையச் சாலையில் ரூ.25.60 கோடி செலவில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
தரிசனம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 3,000 புதிய கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. வோண்டிமிட்டா மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக 100 அறைகள் கட்டுவதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 108 அடி உயர ஜாம்பவான் சிலை ரூ.16.5 கோடி செலவில் கட்டப்படுகிறது. மற்ற கோயில்களின் மேம்பாட்டுக்காகவும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
காணிப்பாக்கத்தில் ரூ.25 கோடி, கொண்டகட்டு ஸ்ரீ வீராஞ்சநேய சுவாமி கோயிலில் ரூ.35.19 கோடி செலவில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. திருமலையில் மருத்துவ தாவரங்கள் வளர்ப்பு, ஒண்டிமிட்டாவில் புனித வனங்களுக்கான தெய்வீக மருத்துவ வனம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அலிபிரி அருகே ரூ.460 கோடி செலவில் ஒருங்கிணைப்பு டவுன் ஷிப் கட்டப்பட உள்ளது. ரூ.750 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் எஸ்சி, எஸ்டி, பிசி காலனிகளில் 5,000 ஸ்ரீநிவாசர் திருக்கோயில்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோயமுத்தூர், மும்பை, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட இடங்களில் ஜூன் மாதத்திற்குள் பூமிபூஜை நடைபெறும். கோவையில் ஒரு பக்தர் ரூ.300 கோடி நன்கொடை அளிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஏழுமலையான் மகிமையை நாடு முழுவதும் பரப்புவதற்கும், தொலைதூர பக்தர்களின் வசதிக்காகவும் நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் ஏழுமலையான் கோயில்கள் கட்டப்படும் என்று அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பதி போறீங்களா? 24 மணிநேரம் காத்திருக்க ரெடியாகுங்க! வைகுண்ட ஏகாதசி கூட்டத்தால் திணறும் தேவஸ்தானம்!