நெல்லை: தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ என்ற செல்வமுருகன், கூடங்குளம் அருகே மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் என்ன, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்–சரஸ்வதி தம்பதியின் மகன் செல்வமுருகன். இவர் ‘தூத்துக்குடி செல்வம்’, ‘துப்பாக்கி செல்வம்’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
செல்வமுருகன் தனது 19-வது வயதில் குற்ற வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் அவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 27-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி மரக்கடை தொழிலாளி கொடூரக் கொலை! மனைவி உள்பட 3 பேர் கைது! விசாரணையில் பகீர்!
கடந்த 2024-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் நடைபெற்ற பணம் பறிப்பு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த செல்வமுருகன், சுசீந்திரம் அருகே தேரூரில் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது, உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜை கத்தியால் தாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய நடவடிக்கையில் செல்வமுருகனின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கூடங்குளம் அருகே சங்கநேரியில் உள்ள தோட்டத்தில் செல்வமுருகன் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கூடங்குளம் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இந்த கொலை நடந்துள்ளது.
தோட்டத்தில் செல்வமுருகன் கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து அப்பகுதியினர் காலையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொலை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
செல்வமுருகனை முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் தோட்டத்தில் இருந்தவர்கள் யார், செல்வமுருகனை சந்திக்க வந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட காவல் துறையினர் இடையே இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. கொலையாளிகளை விரைவில் கண்டறிய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் அதிர்ச்சி! திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு; 2 சிறுவர்கள் கைது