தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரும், பிரபல நடிகருமான தளபதி விஜய், இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தொடங்கிய இந்த மக்கள் சந்திப்பு தொடர் திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற இடங்களைத் தொட்டு வந்துள்ளது. இன்றைய பயணம், விஜயின் அரசியல் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என தவெக தொண்டர்கள் நம்புகின்றனர்.

கடந்த பிரச்சாரங்களில் அவர், ஊழல், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் போன்றவற்றை எதிர்த்து பேசியது பெரும் கவனத்தை ஈர்த்தது. நாமக்கல் - கரூர் பகுதிகளில் தொழிலாளர்கள், விவசாயிகள் அதிகம் உள்ளதால், இங்கு விஜயின் பேச்சு உள்ளூர் பிரச்சினைகளைத் தொடும் என்பது உறுதி. தவெகவின் இலக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவைப் பெறுவது ஆகும்.
இதையும் படிங்க: எதே திமுக VS தவெக- வா? அய்யாசாமி பரீட்சை எழுத்திட்டு வாங்க பேசலாம்… விளாசிய அதிமுக மாஜி அமைச்சர்…!
சமூக வலைதளங்களில் #TVKVijayCampaign, #உங்கவிஜய்_நா_வரேன் என்ற ஹேஷ்டேக்கள் டிரெண்ட் ஆகின்றன. ரசிகர்கள், "நாமக்கல் க்ரேஸி ஆகும்! தளபதி வர்றாரு" என்று பதிவிட்டு உற்சாகத்தில் உழைத்து வருகின்றனர். விஜயின் இந்த சுற்றுப்பயணம், தமிழக அரசியலில் புதிய அலை உருவாக்கும் என அரசியல் கட்சிகள் கவனிக்கின்றன. மேலும், டிசம்பர் வரை தொடரும் இந்தப் பயணம், தவெகவின் வலுவைப் பரிசோதிக்கும் ஒரு சந்தர்ப்பமாக அமையும்.
இதனிடையே தவெக தலைவர் விஜய்யின் வருகையையொட்டி, நாமக்கல் சாலை ரோடில் உள்ள கே.எஸ். திரையரங்கம் அருகே மக்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்துள்ளனர். முன்னதாக நாமக்கல் வரும் வழி முழுவதும் மக்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பரப்புரை நிகழ்த்தும் இடத்திற்கு வந்த அவர், தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் தனது உரையை தொடங்கினார்.
தொண்டர்களிடம் அனைவரும் சாப்பிட்டீர்களா என கேட்ட விஜய், தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டார். மேலும் என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று தனது உரையை தொடங்கிய விஜய், லாரி பாடி கட்டும் தொழிலில் இருந்து அதிக தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல் என்றும் சத்தான உணவு முட்டை கொடுக்கும் ஊர் மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான், முட்டையின் உலகமே நாமக்கல் தான் என்றும் விஜய் கூறினார்.

மேலும் நம்ம அண்ணன் கேப்டன் விஜயகாந்த் என பேசிய விஜய், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கட்டமாக கூறினார். ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியக் கிடங்கு அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்தார்களே செய்தார்களா? தானிய சேமிப்பு கிடங்குகள், கொள்முதல் நிலையங்கள் இணைக்கப்படும் என சொன்னார்கள் செய்தார்களா?, ரேஷன் கடை மூலம் கொப்பரை தேங்காய், வெல்லம் கொள்முதல் செய்ய நடவடிக்கை என சொன்னார்கள், செய்தார்களா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் விஜய்.
மேலும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்கள் செய்தார்களா? என்று கேள்வி எழுப்பிய அவர், 5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படும் நாமக்கல்லில் முட்டை சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியதா? இதுவரை ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சியும் முட்டை ஆய்வுக் கிடங்கு குறித்த கோரிக்கையை நிறைவேற்றியதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நாமக்கல்லில் கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய விஜய், திமுக நிர்வாகிக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்துள்ளதாக கூறுகிறார்கள். நாமக்கல்லில் ஏழைப் பெண்களை குறி வைத்து கிட்னி திருட்டு நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய விஜய், விசைத்தறி தொழிலாளர்கள் வறுமையின் காரணமாக கிட்னியை விற்கும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது எவ்வளவு கொடுமை? என ஆதங்கமாக பேசினார்.
இந்த கிட்னி திருட்டின் ஆரம்பம் கந்துவட்டி கொடுமை என குற்றம் சாட்டிய விஜய், தவெக ஆட்சி அமைந்த உடன் கிட்னி திருட்டு தொடர்புடைய ஒவ்வொருவரும் கைது செய்யப்படுபவர் என கூறினார். மேலும் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: ஏலேய்… அண்ணன் வரேன்! மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் தீவிர ஆலோசனை