சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் வழங்கியதைத் தொடர்ந்து, போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் முதல்வர் விஜயை விமர்சிக்கும் கோஷங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிடம் த.வெ.க. மேலிடம் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் தொடங்கப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக, சென்னையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்த நிகழ்ச்சிக்கு இடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோடிகளைக் கொட்டியும் அலட்சியம்... தவெகவிடம் சிக்கித் திண்டாடும் சி.விஜயபாஸ்கர்... கடைசி இப்படியொரு முடிவெடுத்துட்டாரே...
ஆரம்பத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக இருந்த இந்த நிகழ்ச்சி, பின்னர் தமிழக அரசையும் முதல்வர் விஜயையும் விமர்சிக்கும் வகையில் திசை மாறியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து உளவுத்துறை அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சியாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் த.வெ.க. தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டம் ஆரம்ப நோக்கத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், அதனால் தேவையற்ற சர்ச்சை ஏற்பட்டதாகவும் த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சில நிர்வாகிகள் கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, ஆரம்பத்தில் போராட்டம் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பதற்காக மட்டுமே திட்டமிடப்பட்டதாகவும், பின்னர் சில அமைப்புகள் மற்றும் நபர்கள் இணைந்ததால் அதன் போக்கு மாறிவிட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழல் இனி ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், இந்த விவகாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் சில நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க. அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத அரசியல் வட்டாரத் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: “போனில் இல்ல நேரில் கூப்பிட்டு தான் எச்சரித்தேன்...” - தவெக நிர்வாகியை மிரட்டியது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்...!