தேசிய அரசியலில் புதிய கூட்டணி கணக்குகள் உருவாகிறதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பாந்த்ராவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லத்திற்கு சென்ற கனிமொழியை, உத்தவ் தாக்கரே நேரில் வரவேற்றார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தொகுதி மறுவரையறை விவகாரம், நாடாளுமன்ற அரசியல் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடிய தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸின் நிலைப்பாடு மற்றும் பிராந்திய கட்சிகளின் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

இதனைத் தொடர்ந்து டெல்லியில் சரத்பவார் மற்றும் அவரது மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரையும் கனிமொழி சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புகளின் பின்னணியில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைக்கும் புதிய அரசியல் முயற்சி குறித்து ஆலோசனை நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்ததாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரையும் கனிமொழி சந்திக்க வாய்ப்புள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், ஸ்டாலின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக மூன்றாவது அணி உருவாகிறது என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனவே, தற்போதைய சந்திப்புகளை எதிர்கால அரசியல் ஒருங்கிணைப்புக்கான ஆரம்பகட்ட ஆலோசனைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: ஆபாச பேச்சு தான் திமுகவின் ஆயுதமா?” ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் பதிலடி!