கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐயப்பன் சுவாமிக்கு மாலையணிந்த தவெக தொண்டர் ஒருவர், நடைபந்தலில் இருந்து 18ம் புனித படி வரை தவெக கொடியை உயர்த்திப் பிடித்தபடியே சென்றது, கோயில் விதிமுறைகளை மீறிய செயலாகக் கருதப்பட்டு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சபரிமலை கோயில், ஆண்டுதோறும் மகர விளக்கு திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் புனித தலமாகும். இங்கு 18 புனித படிகள், அய்யப்ப பக்தர்களின் உறுதிப்பாட்டையும் தவத்தையும் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரியமாக, இந்த படிகளை ஏறும் பக்தர்கள் இறுமுடிக்கட்டு (புனிதப் பொருள்களுடன் கூடிய பை) தலையில் சுமந்து, காலணிகள் அணியாமல், கடும் விரதங்களை கடைப்பிடித்தே செல்வது வழக்கம்.
இதையும் படிங்க: நாளை சபரிமலை மகரஜோதி... அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... ஸ்தம்பிப்பு..!
ஆனால், தவெக தொண்டர் ஒருவர், கோயிலின் நடைபந்தலில் இருந்து தொடங்கி, 18ம் படி வரை தவெக கொடியை உயர்த்திப் பிடித்தபடியே நடந்து சென்றார். இது, பக்தர்களின் பாரம்பரிய நம்பிக்கைகளை மீறிய செயலாகக் கருதப்பட்டு, அங்கிருந்த பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 18ம் படி ஏறும் முன் பிடித்த காவல்துறையினர் அறிவுரை வழங்கியபின், அந்த தொண்டர் கொடியை மடக்கி வைத்து 18ம் படியை ஏறி சென்றார்.
"இது எங்கள் நம்பிக்கையை அவமதிக்கும் செயல். 18 படிகள் என்பது அய்யப்பனின் அருளைப் பெறுவதற்கான புனித பாதை. இதில் கட்சி கொடி ஏந்தி செல்வது ஏற்றுக்கொள்ள முடியாது," என்று ஒரு பக்தர் கோபத்துடன் தெரிவித்தார். மற்றொரு பக்தர், இது போன்ற சம்பவங்கள் கோயிலின் பாரம்பரியத்தை சிதைக்கும்," என்று கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. சபரிமலை கோயில், கடந்த சில ஆண்டுகளாக பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. 2018இல் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பெண்கள் நுழைவு அனுமதி வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பாரம்பரியவாதிகளிடையே போராட்டங்கள் ஏற்பட்டன.
இப்போது இந்த சம்பவம், மீண்டும் கோயிலின் நிர்வாகம் மற்றும் பாரம்பரியம் குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது. இச்சம்பவம், சபரிமலையின் திருவிழா காலத்தில் ஏற்பட்டுள்ளது. மகர விளக்கு திருவிழா நடைபெற உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள் பக்தர்களின் உணர்வுகளை பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!