கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கப் பயன்படுத்தப்பட்ட காகிதக் கவர்களில், காலை, மதியம், மாலை, இரவு, உணவுக்கு முன், உணவுக்குப் பின் உள்ளிட்ட மருந்து உட்கொள்ளும் நேரங்கள் குறித்த வழிமுறைகள் அச்சிடப்பட்டிருந்தன.
வழக்கமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும் இந்த குறிப்புகளுடன், சில கவர்களில் இந்தி மொழியிலும் குறிப்புகள் அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து விவகாரம் சர்ச்சையானது.
கரூர் மருத்துவமனை தரப்பு விளக்கம்:
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் எம். பாரதிமோகன் அளித்த விளக்கத்தின்படி, இந்த மாத்திரைக் கவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே ஆர்டர் செய்யப்பட்டவை. தற்போது அவை பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்தி இடம்பெற்றிருப்பது கவனத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெகவில் விரிசலா? விஜய்யை விட்டு விலகும் நாஞ்சில் சம்பத்.. அதிருப்திக்கு காரணம் என்ன..??
விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, இந்த கவர்களில் இனிமேல் மருந்துகளை வழங்கக்கூடாது என மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மருத்துவமனையில் நிலை என்ன?
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரப்பில், இந்த கவர்கள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டவை என்றும், தற்போது அவை அகற்றப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் குறிப்புகள் இடம்பெறும் புதிய கவர்களில் மாத்திரைகள் வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால், கோவை மருத்துவமனை தொடர்பான செய்திகளில், இந்தி இடம்பெற்ற கவர்கள் முந்தைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டதாகவும், வடமாநிலத்தைச் சேர்ந்த நோயாளிகள் மற்றும் தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவை அச்சிடப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த ஆட்சிக் காலத்திலும் இருந்ததாக சில மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.
தவெக ஐடி விங்க் கண்டனம்:
இதுகுறித்து தவெக ஐ.டி. விங்க் தனது சோசியல் மீடியா பக்கத்தில், “கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில் இந்தியுடன் மும்மொழி இடம்பெற்றதாக தீயசக்திக் கூட்டம் கொதித்துக் குதித்துக் கூப்பாடு போடுகிறது. நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இயங்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி இப்படி ஒரு மும்மொழி மோசடியை ஒருநாளும் செய்யாது. மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை அண்ணாவின் இருமொழிக் கொள்கையே நம் த.வெ.க. அரசின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு.
உண்மை என்னவெனில், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில்தான் கடந்த 2025 டிசம்பர் மாதம் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்ட ஆணை மூலம் ஈரோடு கூட்டுறவு சங்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட மாத்திரை கவரில்தான் இந்தியும் இடம்பெற்றுள்ளது. அதை மூடி மறைத்து, தாய்மொழி காப்பதுபோல முகமூடி வேடம் போட்டு தீயசக்தி தி.மு.க. மொழிகாக்கும் மூலசக்திபோல குதித்து நாடகம் ஆடுகிறது. இந்த உண்மையை, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரே தெளிவுபடுத்தி உள்ளார்.
1996ல் ஆட்சி அமைத்த தீயசக்தி தி.மு.க., அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்படியான இந்திய அரசியல் சாசனப் புத்தகம் தரப்பட்டது என 2001ல் ஆட்சிக்கு வந்தபோது, சட்டமன்றத்திலேயே அப்போதைய முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அந்தப் புத்தகத்தையே அவையில் காட்டி தீயசக்தி தி.மு.க.வின் முகத்திரையைச் சுக்கு நூறாகக் கிழித்ததுதான் சட்டமன்றப் பேரவை வரலாறு. அன்றைக்கு தி.மு.க. சார்பாகப் பதிலளித்த மதிப்பிற்குரிய மாண்புமிகு பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அப்படி நடந்திருந்தால் அது தவறுதான் என்று கூறியதும் சபைக்குறிப்பில் இருப்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.
ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்திக்குப் பக்க வாத்தியம் வாசித்துவிட்டு, ஆட்சி பறிபோனதும் மண்,மொழி,இனம், மானம் காக்கும் உத்தமர் போல வேடம் போட்டுக் குதிப்பதும், பின்னர் குட்டு உடைந்து குப்புற விழுந்து மூக்குடைபடுவதும் வாடிக்கை என்பதுதான் தீயசக்தி தி.மு.க.வின் வரலாறு” என விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: "செவிலியர்கள் மீது கொடூர தாக்குதல்"..! பகிரங்க மிரட்டல்..! கீதாஜீவன் கண்டனம்..!!