தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கைப்பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், கட்சித் தலைவர் விஜய் மற்றும் அவரது உள்வட்ட அதிகார மையங்கள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த மூன்று நாட்களாக, அவர் விரைவில் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகப் போவதாக வதந்திகள் உலாவருகின்றன.
ஆனால், இதுவரை அவர் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், விஜய் மீதான அதிருப்தி உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.2025 டிசம்பரில் தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு உடனடியாக கொள்கைப்பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மூத்த பேச்சாளரும் எழுத்தாளருமான அவர், திமுக, மதிமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி எதிர்பார்த்தார். ஆனால் சீட் கிடைக்கவில்லை. அப்போது விஜயை சந்தித்த போது, “தேர்தலில் சீட் கிடைக்காததற்காக வருத்தப்பட வேண்டாம். ஆட்சிக்கு வந்ததும் உரிய பதவிகள் வழங்கப்படும்” என ஆறுதல் அளித்ததாக தகவல்.தவெக ஆட்சியைப் பிடித்து விஜய் முதலமைச்சரான பிறகு, பல்வேறு வாரியப் பதவிகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: "செவிலியர்கள் மீது கொடூர தாக்குதல்"..! பகிரங்க மிரட்டல்..! கீதாஜீவன் கண்டனம்..!!
அப்போது இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எதிர்பார்த்த சம்பத், முதல்வரின் முக்கிய ஆலோசகர்களிடமும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். நீண்ட நாட்களாக எந்த பதிலும் வராத நிலையில், கடந்த வாரம் நாட்டுப்புறக் கலைஞர் புஸ்பவனம் குப்புசாமி அந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டதாக அறிந்தார். அதிர்ச்சியடைந்த அவர் விஜய்யையும் ஆலோசகர்களையும் தொடர்பு கொள்ள முயன்றார்.

ஆனால் தொடர்பே கிடைக்கவில்லை. இது அதிருப்தியாக மாறியது.அதன் வெளிப்பாடாக, “போனால் போகட்டும் போடா... இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா... என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது...” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வராததும், மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்டதும் வருத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது.
நட்சத்திரப் பிரச்சாரப் பட்டியலில் பெயர் இல்லாததால் ஆதங்கம் வெளிப்பட்டதாக அவர் பின்னர் விளக்கமளித்தார். “தவெகவில் இருந்து விலகவில்லை. முட்டாள்தனமான முடிவு எடுக்கமாட்டேன்” என உறுதியளித்தார். நெருக்கமானவர்கள் கூறுகையில், இடைத்தேர்தல் முடிந்த பிறகு கட்சி முக்கியஸ்தர்கள் சமாதானப்படுத்தினால் அமைதி வரும். இல்லையெனில் விலகல் நடக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.
தவெகவின் உள்முரண்பாடுகள் இன்னும் வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும், மூத்த பேச்சாளரின் இந்த அதிருப்தி கட்சிக்குள் அமைதி குலைக்கும் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "சத்தியபாமா வீடியோ AI"..! குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்..!!