தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய சட்டப்பேரவை உருவாகும் நிலையில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மைக்கு அருகில் அல்லது கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் சூழலில், புதிய அரசின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றான எம்.எல்.ஏ.க்களின் பதவியேற்பு விழா மற்றும் தற்காலிக சபாநாயகர் நியமனம் குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன.
இன்று தலைமைச் செயலகத்தில் தவெகவின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளரும், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 9-வது முறையாக வெற்றி பெற்றவருமான கே.ஏ. செங்கோட்டையன், சட்டமன்ற செயலாளர் சீனிவாசனை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு, புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடருக்கு முன்பாக நடைபெற்றது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய எம்.எல்.ஏ.க்களின் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் போன்ற நடைமுறைகளை ஒருங்கிணைக்க தற்காலிக சபாநாயகர் நியமனம் அவசியம். இந்தப் பொறுப்பை யார் ஏற்க வேண்டும் என்பது குறித்து ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சட்டமன்ற செயலகம் ஆலோசனை நடத்துவது வழக்கம். செங்கோட்டையன், தமிழக அரசியலில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பிறகு, கட்சியின் முக்கிய தூணாகவும், மேற்கு மண்டல அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றி வருபவர். அவரது அனுபவமும், தற்போதைய வெற்றியும் இந்த ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
இதையும் படிங்க: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்! ஆளுநருக்கு அவசர கடிதம்!
தற்காலிக சபாநாயகரின் பொறுப்பு மிகவும் முக்கியமானது. பொதுவாக, சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினர்களில் ஒருவரை ஆளுநர் இந்தப் பதவிக்கு நியமிப்பார். இவர் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின்னர் நிரந்தர சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் தலைமை தாங்குவார். தவெக ஆட்சி அமைக்கும் நிலையில், இந்தப் பொறுப்பை நம்பகமான, அனுபவம் மிக்க தலைவருக்கு வழங்க வேண்டும் என்பதில் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. செங்கோட்டையனின் சந்திப்பு இந்த நியமனம் தொடர்பான நடைமுறை மற்றும் அரசியல் ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இருந்தது.
இதையும் படிங்க: #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!