அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் H-1B விசா தொடர்பாக புதிய கட்டண முன்மொழிவு வெளியாகியுள்ளது. ஒதுக்கீட்டு வரம்புக்குள் வரும் H-1B விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே உள்ள கட்டணங்களுக்கு மேலாக 1,03,265 அமெரிக்க டாலர் கூடுதல் கட்டணம் விதிக்க அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை முன்மொழிந்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பலரும் H-1B விசாவை நம்பியுள்ள நிலையில், இந்த முன்மொழிவு கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க சட்டப்படி ஆண்டுக்கு 65,000 H-1B விசாக்கள் வழக்கமான ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகின்றன. இதுதவிர, அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முதுகலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்ற வெளிநாட்டினருக்காக மேலும் 20,000 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுதோறும் 85,000 விசாக்கள் வரை இந்த ஒதுக்கீட்டு முறையின் கீழ் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ஒதுக்கீட்டு வரம்புக்குள் வரும் ஒவ்வொரு தகுதியான விண்ணப்பத்திற்கும் 1,03,265 டாலர் என்ற தனிப்பட்ட கூடுதல் கட்டணத்தை விதிக்கும் வகையில் புதிய விதிமுறையை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை முன்மொழிந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.90 லட்சத்துக்கும் அதிகமாகும்; இருப்பினும் டாலர்–ரூபாய் மாற்று விகிதத்தின்படி தொகை மாறுபடும்.
இதையும் படிங்க: டிரம்ப் கொள்கையால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்! 62% விசா சரிவு!

இந்த முன்மொழிவு, ஏற்கனவே H-1B விண்ணப்பங்களுக்கு விதிக்கப்படும் கட்டணத்துடன் இணைக்கப்படாமல், தனியாக வசூலிக்கப்படும் என ‘ஃபெடரல் ரெஜிஸ்டர்’ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, அனைத்து H-1B விண்ணப்பங்களுக்கும் இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டு வரம்பிலிருந்து விலக்கு பெறும் H-1B விண்ணப்பங்களுக்கு இந்த கட்டணம் விதிக்கப்படாது. குறிப்பிட்ட லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சில அமைப்புகள் தாக்கல் செய்யும் ஒதுக்கீட்டு வரம்புக்கு உட்படாத விண்ணப்பங்கள் இதிலிருந்து விலக்கு பெறும்.
இந்த முன்மொழிவு தொடர்பாக அடுத்த 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். அவை பரிசீலிக்கப்பட்ட பின்னர் இறுதி விதிமுறை வெளியிடப்படும். எனவே, தற்போது இது இறுதி நடைமுறையாக அமலுக்கு வந்துவிட்டது என்று கூற முடியாது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் தரப்பில், சட்டப்பூர்வ குடியேற்ற திட்டங்களை ஆய்வு செய்வது, சரிபார்ப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பான அரசின் செலவுகளை ஈடுகட்டும் நோக்கத்திலேயே இந்த கட்டண முன்மொழிவு கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றால் ரூ.28 லட்சம்!! ஈரான் வெளியிட்ட அதிரடி சன்மான அறிவிப்பு!