தேர்தல் வாக்குறுதிப்படி ஐந்து ஏக்கர் மற்றும் அதற்கும் குறைவான நிலமுடைய விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைக் காவல்துறை கைது செய்திருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி ஐந்து ஏக்கர் மற்றும் அதற்கும் குறைவான நிலமுடைய விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், புதிய கடன்களை நிபந்தனையின்றி உடனடியாக வழங்க வேண்டும், மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள பயிர் சாகுபடி பாதிப்பிற்கு உரிய இழப்பீடும், வேலை இழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்குத் தகுந்த நிவாரணமும் வழங்கிட வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்குத் தேவையான தண்ணீரைத் தொடர்ந்து திறந்து விட வேண்டும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தரத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பது அரசமைப்புக்கு எதிரானது! சிபிஐ வீரபாண்டியன் ஆவேசம்!
இப்போராட்டங்களின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, சங்கத் தலைவர்கள் எம். சேகர், டி. முருகையன், டி. தியாகராஜன், நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் வை. செல்வராஜ் எம்.பி., திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் க. மாரிமுத்து எம்.எல்.ஏ., எஸ். கேசவராஜ், கோ. சக்திவேல் உள்ளிட்ட முக்கிய மக்கள் பிரதிநிதிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளது எதேச்சதிகாரமானது என்று விமர்சித்துள்ள அவர், கைது செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் அனைவரையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளின் நியாயமான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!