வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு வரும் செப்டம்பர் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் அவர்களால் வெளியிடப்பட்டது. அன்னையின் பிறந்தநாள் விழா மற்றும் திருவிழாவின் நிறைவு நிகழ்வுகளை ஒட்டி இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயம் கீழைநாடுகளின் லூர்து என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற திருத்தலமாகும். ஆண்டுதோறும் ஆகஸ்ட் இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த திருவிழா பத்து நாட்கள் நீடிக்கும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தலைமையில் கொடி ஏற்றப்பட்டது.

அதன் பிறகு தினந்தோறும் நவநாள் வழிபாடுகள், பல்வேறு மொழிகளில் திருப்பலிகள், ஜெபமாலை, மாதா மன்றாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, கொங்கணி, இந்தி போன்ற மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன.திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7ஆம் தேதி இரவு நடைபெற உள்ளது. அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட அலங்காரத் தேர் பக்தர்கள் மத்தியில் மெதுவாக வலம் வரும் காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இதையும் படிங்க: வேளாங்கண்ணி கொடியேற்றத்தில் பயங்கரம்... வெடித்து சிதறிய பகீர் காட்சிகள்... பதறிய மக்கள்...!
அடுத்த நாள் செப்டம்பர் 8ஆம் தேதி அன்னை மரியாளின் பிறந்தநாள் விழாவாக சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறும். மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடையும்.இந்த முக்கிய நிகழ்வுகளை ஒட்டி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செப்டம்பர் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும்.
இதையும் படிங்க: விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!