தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) குறித்து தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க.) தலைவர் விஜய் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். “விதிகளைத் தெரியாமல் விஜய் குறை கூறுகிறார்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
த.வெ.க. எஸ்.ஐ.ஆர். பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து விஜய் வெளியிட்ட வீடியோவில், “கொஞ்சம் ஏமாந்தால் ஓட்டுரிமை இழக்க நேரிடும். முதல் முறை வாக்காளர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இறந்தவர்கள், போலி வாக்காளர்களை நீக்கி, புதியவர்களைச் சேர்த்தால் போதும்.
ஏற்கனவே பட்டியலில் உள்ள 6.36 கோடி வாக்காளர்களை மீண்டும் விண்ணப்பிக்கச் சொல்வது ஏன்? ஒரு மாதத்தில் இவ்வளவு படிவங்களை எப்படிப் பெற முடியும்? ஓட்டுச்சாவடி அலுவலர் வரும்போது வீட்டில் இல்லையென்றால் என்ன செய்வது? த.வெ.க.வினருக்கு மட்டும் படிவங்கள் கொடுக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். “முதல் முறை வாக்காளர்கள், ஓட்டு இல்லாதவர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள் பெயரைச் சேர்க்கவோ நீக்கவோ எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் எஸ்.ஐ.ஆர். என்பது 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சிறப்புத் திருத்தப் பணி. போலி வாக்காளர்களை முழுமையாக நீக்க இது அவசியம்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை 'Sir'ஐ விட... இது பயங்கரமான 'SIR'இல்லை!! நயினார் மாஸ் பேச்சு!
இதில் அனைத்து வாக்காளர்களும் பட்டியலில் சேர்க்கப்படுவர். வீடுதோறும் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்ட பிறகு வரைவு பட்டியல் வெளியிடப்படும். பின்னர் விடுபட்டோரைச் சேர்க்க வாய்ப்பு உண்டு” என்று விளக்கினர்.

“விதிகளைத் தெரியாமல் தற்போதே படிவம் 6ஐப் பூர்த்தி செய்யச் சொல்கிறார் விஜய். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் யார் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறிய முடியாது. எனவே த.வெ.க.வினருக்கு மட்டும் படிவம் கொடுக்கவில்லை என்பது தவறு” என்றும் அதிகாரிகள் கூறினர்.
மேலும், தேர்தல் கமிஷன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும் என விஜய் தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு அதிகாரி ஒருவர், “அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கணக்கில் உள்ளன. அனைவரையும் அழைப்பது நடைமுறைக்கு ஒவ்வாது. இதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
எஸ்.ஐ.ஆர். பணி தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை உறுதி செய்ய இப்பணி முக்கியம் என்று தேர்தல் கமிஷன் வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: திமுக போல வெற்றி பெற அறிவு வேணும்! உழைக்கணும்! பகல் கனவு காணக்கூடாது! விஜயை சீண்டும் ஸ்டாலின்!!