கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய பொறுப்பில் ஒரு மூத்த அதிகாரியை நியமித்துள்ளார். வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஜானிஸ் சாரெட் (Janice Charette) அமெரிக்காவுக்கான கனடாவின் தலைமை வர்த்தக பேச்சுவார்த்தை அதிகாரியாக (Chief Trade Negotiator to the United States) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம் (CUSMA - Canada-United States-Mexico Agreement) என்று அழைக்கப்படும் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் வரவிருக்கும் கூட்டு மதிப்பாய்வுக்கு (joint review) முன்னதாக வந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் 2020-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன் ஆறாவது ஆண்டு நிறைவில், அதாவது 2026 ஜூலை 1-க்குள் மூன்று நாடுகளும் இணைந்து மறுஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த மதிப்பாய்வு, ஒப்பந்தத்தைத் தொடர்வது, திருத்துவது அல்லது மாற்றியமைப்பது குறித்து முடிவெடுக்கும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதம் அமெரிக்காவுக்கு செல்வதால், இந்த ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமானது.
இதையும் படிங்க: “கனடா ஒரு நுழைவுவாயில் அல்ல!” சீனப் பொருட்களுக்கு தடை போட துடிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!!
CUSMA மூலம் பெரும்பாலான ஏற்றுமதிகள் அமெரிக்க வரிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. இதனால், வர்த்தக உறவுகளில் ஏற்படும் எந்த மாற்றமும் கனடிய தொழில்கள், தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜானிஸ் சாரெட் பிரதமர் மார்க் கார்னிக்கும், கனடா-அமெரிக்க வர்த்தகத்துக்கு பொறுப்பான அமைச்சர் டொமினிக் லெப்லாங்கிற்கும் (Dominic LeBlanc) மூத்த ஆலோசகராக செயல்படுவார். அமெரிக்காவுக்கான கனடா தூதர் மார்க் வைஸ்மேனுடன் (Mark Wiseman) இணைந்து பணியாற்றுவார்.
இந்த பேச்சுவார்த்தைகளில் கனடாவின் நலன்களை வலுவாக முன்னிறுத்தி, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் வலுவான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவை உருவாக்குவதே இவரது முதன்மை இலக்கு. சாரெட், கனடாவின் பொது சேவையில் நான்கு தசாப்த கால அனுபவம் கொண்டவர். அவர் இரண்டு முறை பிரைவி கவுன்சில் எழுத்தராகவும் (Clerk of the Privy Council), அமைச்சரவை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கனடாவின் சிவில் சர்வீஸின் தலைவராக இந்த பதவி கருதப்படுகிறது.
ஸ்டீபன் ஹார்பர் மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இப்பதவியை அலங்கரித்தவர் இவர். பொதுக் கொள்கை, இராஜதந்திரம் மற்றும் அரசு நிர்வாகத்தில் அவரது நிபுணத்துவம் புகழ்பெற்றது. பிரதமர் கார்னி இந்த நியமனம் குறித்து கூறுகையில், "நான்கு தசாப்த கால பொதுக் கொள்கை மற்றும் இராஜதந்திர அனுபவத்துடன், ஜானிஸ் சாரெட் அசாதாரண தலைமைத்துவம், நிபுணத்துவம் மற்றும் கனடாவின் நலன்களை முன்னேற்றுவதற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பை கொண்டு வருகிறார்.

தலைமை வர்த்தக பேச்சுவார்த்தை அதிகாரியாக, கனடிய நலன்களை மேம்படுத்துவதோடு, கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில்களுக்கு பயனளிக்கும் வலுவான வர்த்தக உறவை உருவாக்குவார்" என்றார். இந்த நியமனம், கனடா-அமெரிக்க வர்த்தக உறவுகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவுடனான உறவுகளில் சில பதற்றங்கள் நிலவும் சூழலில், சாரெட்டின் அனுபவம் கனடாவுக்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சொத்தை பழம் போல் பட்ஜெட்...! எல்லாம் ஏமாற்று வேலை... வறுத்தெடுத்த EPS..!