தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை நடக்கிறது. தவெக தலைவர் விஜய் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் கடந்த மார்ச் 30ம் தேதியும், திருச்சி கிழக்கில் ஏப்ரல் 2ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவர் தாக்கல் செய்த இரு வேட்புமனுக்களிலும் குளறுபடிகள் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இதனால், அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளரும் படிவம் 26ல் சட்டப்படி தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து குறிப்பிட வேண்டும். அந்த வகையில், நேற்று திருச்சி கிழக்கில் விஜய் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மதுரை மாவட்டம் கூடக்கோவில் காவல் நிலையத்தில் 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதற்கு முன்னதாக பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன் மீது எந்த குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை எனக்குறிப்பிட்டுள்ளார். திருச்சி கிழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ள படி, 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடந்த தவெக மாநாட்டின் போது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் கூடக்கோவில் போலீசார் இந்த எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதைத் தான் திருச்சி கிழக்கு வேட்புமனுவில் விஜய் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெரம்பூர் வேட்புமனுவில் குற்ற சம்பவங்கள் குறித்து குறிப்பிடாதது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!
ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் இவ்வாறு முரண்பட்ட தகவல்கள் இருப்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இப்படி பிரமாண பத்திரத்தில் வேட்பாளர் தகவலை மறைப்பது ல்லது தவறான தகவல்களை அளிப்பது தண்டனைக்குரியது மட்டுமின்றி, வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஒரு வழக்கை ஒரு இடத்தில் ஒப்புக்கொண்டு மற்றொரு இடத்தில் மறைப்பது தகவல் மறைப்பு என்ற பிரிவின் கீழ் வரும். வேட்புமனு பரிசீலனையின்போது, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி மனுவை நிராகரிக்கக் கோரினால் தேர்தல் அதிகாரி தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கும். இதில் விஜய்க்கு இருக்கும் வாய்ப்பு என்னவென்றால், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்னும் இருப்பதால், திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதன் மூலம் இந்தச் சிக்கலில் இருந்து அவர் தப்பிக்க முடியும்.
இதையும் படிங்க: வேட்பு மனுவை மறந்து சென்ற தவெக வேட்பாளர்...! திருப்பி அனுப்பிய அதிகாரிகள்..! காத்திருந்து மனுத் தாக்கல்..!!