கடந்த 1967-க்குப் பிறகு தமிழகத்தில் எத்தனையோ தேர்தல்கள் வந்தாலும், இறுதிப் போட்டி எப்போதும் தி.மு.க. அணியும் அ.தி.மு.க. அணியும் தான். மற்ற கட்சிகள் வந்தாலும் கடைசியில் இந்த இரண்டில் ஒன்றுதான் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தல் வேறு விதமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தான்.
விஜய் தெளிவாகச் சொல்லி விட்டார் – கொள்கை எதிரியான பா.ஜ.க.வுடனும், அரசியல் எதிரியான தி.மு.க.வுடனும் கூட்டணி கிடையாது. அதே நேரத்தில் “ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன்” என்று சொன்னதால், கூட்டணிக்கு அவர் தயாராகவே இருக்கிறார். ஆனால் அந்தக் கூட்டணியின் தலைமை தவெகவாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது நிபந்தனை.
தற்போதைய நிலையில் விஜய்யின் முன் மூன்று வழிகள் மட்டுமே உள்ளன.
முதலாவது – தனது தலைமையில் புதிய கூட்டணி அமைப்பது. இதற்கு தி.மு.க. கூட்டணி உடைய வேண்டும். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வெளியேற வேண்டும். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. திரைமறைவில் நடந்த தவெக-காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இந்தியா கூட்டணியை வலுவாக வைத்திருக்க டெல்லி மேலிடம் தனி குழுவையும் அமைத்து விட்டது.
இதையும் படிங்க: நவ.27-ல் தவெகவில் இணையும் செங்கோட்டையன்! டிச.15ம் தேதி - கெடு விதிக்கும் ஓபிஎஸ் !! விழிபிதுங்கும் இபிஎஸ்!

இரண்டாவது – அ.தி.மு.க.வுடன் கூட்டணி. சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி “பிள்ளையார் சுழி போட்டாச்சு” என்று சொன்னதால் விஜய்-அ.தி.மு.க. கூட்டணி வரும் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க. இருப்பதால், விஜய்யின் கொள்கைப்படி இந்தக் கூட்டணியும் சாத்தியமில்லை.
மூன்றாவது – எந்தக் கட்சியும் வராவிட்டால் தனித்துப் போட்டியிடுவது. இது நிச்சயம் பலமான மும்முனைப் போட்டியை உருவாக்கும். தி.மு.க.வைப் பொறுத்தவரை தங்கள் கூட்டணி உடையாமல் பார்த்துக் கொண்டால் போதும், வெற்றி உறுதி என்று நம்புகிறது. ஆனால் விஜய் தனித்து நின்றால், தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையிலான வாக்குகள் பிரியும். அதனால் இரண்டில் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதையாவது தடுக்க முடியும் என்று விஜய் வட்டாரம் கருதுகிறது.
தேர்தல் நெருங்கும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் விதி. கடைசி நேரத்தில் கூட்டணி முயற்சிகள் தீவிரமடையும். ஆனால் இப்போதைய நிலையில் விஜய் கூட்டணி அமைத்தாலும் தனித்துப் போட்டியிட்டாலும், 2026 தேர்தல் பலத்த மும்முனைப் போட்டியாகவே அமையும் என்று அரசியல் நோக்கர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். விஜய்யின் இறுதி முடிவுதான் தமிழக அரசியலின் அடுத்த திருப்பத்தைத் தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: விஜய்க்கு என்ன வேணும்னு கேளுங்க!! ஒன் டூ ஒன் பேசுங்க! ராகுல்காந்தி சீக்ரெட் ஆர்டர்!