சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் அடுத்த மாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற உள்ள நிலையில், காவல்துறை உயர் மட்டத்தில் பெரும் மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து புதிய டிஜிபியை நியமிப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒருமித்த கருத்து எட்டப்படாததால், கடந்த சில மாதங்களாக வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாகப் பணியாற்றி வருகிறார். நிரந்தர டிஜிபி இல்லாதது குறித்து அரசியல் ரீதியாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் (ஜனவரி) நிரந்தர டிஜிபி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
தற்போதுள்ள சீனியாரிட்டி பட்டியலில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூவரது பெயர்கள் முன்னிலையில் உள்ளன. இவர்களில் 1990-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சைச் சேர்ந்த சீமா அகர்வால் மிகவும் சீனியர் அதிகாரி என்பதால், தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக அவர் நியமிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் நியமிக்கப்பட்டால், லத்திகா சரணுக்குப் பிறகு தமிழகக் காவல்துறையின் படைத் தலைவராகும் இரண்டாவது பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெறுவார்.
இதையும் படிங்க: #BREAKING: தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி மாற்றம்: வெங்கட்ராமனுக்குப் பதில் அபய்குமார் சிங் நியமனம்!
அதேசமயம், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் வரும் ஜனவரி மாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற உள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவரை டிஜிபியாக நியமித்தால், தேர்தல் ஆணையம் அவரை மாற்ற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகப் பணியமர்த்தத் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகவும், அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கு டிஜிபி பொறுப்பிற்குச் சீமா அகர்வாலைப் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உச்சத்தை விட்டு அரசியலுக்கு வருவது அவ்ளோ EASY இல்ல... விஜய்க்கு நடிகர் கிச்சா சுதீப் ஆதரவு...!