தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் ஒருபோதும் ஓயாது என்றும், பிரதமர் நரேந்திர மோடியாலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவாலும் தங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக முழங்கியுள்ளார்.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி, பாராளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் மற்றும் ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாகச் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்களை டெல்லி காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
காவல்துறையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட ராகுல் காந்தி, ஒன்றிய பாஜக அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்! ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

அந்த வீடியோவில் பேசிய ராகுல் காந்தி, ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை எங்கள் போராட்டம் நிற்கப் போவதில்லை. இந்த நாட்டின் மிகப்புனிதமான விஷயமான நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் யுத்தம் இது. நரேந்திர மோடியாலும் அமித் ஷாவாலும் கூட எங்களை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதிகார பலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க நினைக்கும் அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இப்போராட்டம் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தனது உரையில் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள இந்த நேரடி வீடியோ பதிவு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு... ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் குண்டு கட்டாக கைது...!