ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பில் ராஜஸ்தான் அணி தனது வெற்றியை உறுதி செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராகக் களம் இறங்கி 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். மிடில் ஆர்டரில் களம் புகுந்த ஜுரேல், 42 பந்துகளில் 75 ரன்கள் (5 பவுண்டரி, 5 சிக்ஸர்) விளாசி அணியின் ஸ்கோரை 200-ஐ கடக்கச் செய்தார். குஜராத் வீரர் அசோக் சர்மா இந்த சீசனின் அதிவேகப் பந்தை (154.2 கி.மீ) வீசி சாதனை படைத்தார்.

211 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்குத் தொடக்க வீரர் சாய் சுதர்சன் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். அவர் 44 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டத்தை குஜராத் பக்கம் திருப்பினார். ஒரு கட்டத்தில் 107/1 என வலுவாக இருந்த குஜராத் அணி, சாய் சுதர்சன் ஆட்டமிழந்த பிறகு சரிவைச் சந்தித்தது.
இதையும் படிங்க: சிஎஸ்கே-வை வீழ்த்தியது பஞ்சாப்! சேப்பாக்கத்தில் சென்னைக்கு தொடர் தோல்வி!
நடுப்பகுதியில் அபாரமாகப் பந்துவீசிய பிஷ்னோய், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி குஜராத் அணியின் மிடில் ஆர்டரைச் சிதைத்தார். கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19-வது ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது, இளம் கேப்டன் ரியான் பராக் பந்தை துஷார் தேஷ்பாண்டேவிடம் வழங்கினார். அவர் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளைத் தொடர்ந்து வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ், ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. குஜராத் அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து ஏழாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: தோனி இல்லாத குறையை தீர்க்குமா யெல்லோ ஆர்மி! நாளை பஞ்சாப் கிங்ஸுடன் பலப்பரீட்சை!