தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சம்பத் ராம். பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், தனக்கு கொடுக்கப்படும் வேடத்தை சிறப்பாக செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவரான சம்பத் ராம், தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் பிஸியான வில்லன் நடிகராக உருவெடுத்திருப்பதோடு, பான் இந்தியா படங்களில் நடிக்கும் பான் இந்தியா நடிகராகவும் வலம் வருகிறார்.
இந்த நிலையில், மலையாள திரையுலகம் மற்றும் எழுத்துலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வரும் மலையாள புரஷ்காரம் சமிதி, நடிகர் திலீப் நடித்த ’தங்கமணி’ என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்த சம்பத் ராமுக்கு, சிறந்த வில்லன் நடிகருக்கான ‘மலையாள புரஷ்காரம் 1200’ விருது வழங்கி கெளரவித்துள்ளது. கேரளாவின் கெளரவம் மிக்க விருதுகளில் ஒன்றான இவ்விருதுக்குரியவர்களை அம்மாநில பத்திரிகையாளர்கள், கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் எழுத்தாளர்கள் குழு தேர்வு செய்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால், சுரேஷ் கோபி நடித்த 'ஜனகன்' படத்தின் மூலம் மலையாளத்தில் முக்கிய வில்லனாக அறிமுகமான சம்பத் ராம், தொடர்ந்து 'மாளிகைபுரம்’ படம் மூலம் மலையாளத்தில் தனக்கென தனியிடம் பிடித்தார். அப்படத்தின் வெற்றி மற்றும் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்தவர் தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். மோகன் லால், மம்மூட்டி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான வில்லன் வேடத்தில் நடித்து வருபவர், ‘பாக்கியலட்சுமி’ என்ற படத்தில் குணச்சித்திர வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதுவரை வில்லனாக மிரட்டி வந்தவர், முதல் முறையாக அழுத்தமான குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு சீறிக்கொண்டு வரும் 'பைசன் காளமடான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இஸ்லாமிய பள்ளி தலைமை ஆசிரியர் வேடத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் இந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, வில்லன் என்ற பார்வையை தாண்டி, சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற புதிய பார்வையை தன் மீது ஏற்படுத்தும், என்று சம்பத் ராம் தெரிவித்துள்ளார்.

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மோசஸ் இயக்கும் ‘வெக்கை’, இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படம், ‘சாட்டை’ புகழ் அன்பழகன் இயக்கும் ’மனிதி’, ‘கங்கணம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதோடு, உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
‘சாலமோன்’, ‘கார்லோஸ்’ மற்றும் ‘பொங்கலா’ ஆகிய மலையாளத் திரைப்படங்களுடன், ‘தேவரா ஆட்ட பல்லவராரு’ என்ற கன்னட படத்திலும் நடித்து, மேலும் இரண்டு கன்னட படங்களில் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். இப்படி தென்னிந்திய சினிமாவில் பிஸியாக வலம் வந்தாலும் சம்பத் ராமுக்கு தன் சொந்த மொழியான தமிழ் சினிமாவில் மற்ற மொழிகளில் கிடைக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை, என்ற வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது.

மலையாள சினிமாவில் மோகன்லால், மம்மூடி என முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான வில்லனாக நடிப்பவர், தெலுங்கில் பிரபாஸ், விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகும் ‘கண்ணப்பா’ மற்றும் கன்னடத்திலும் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து, தொடர்ந்து சிறு சிறு வில்லன் வேடங்களில் நடித்து வந்தாலும், பெரிய நடிகர்களின் படங்களில் முக்கிய வில்லனாக நடிக்க வேண்டும், என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்காக நான் பல வருடங்களாக கடுமையாக உழைத்தாலும், தமிழில் அப்படி ஒரு வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அத்தகைய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மற்ற மொழிகளைப் போல் தமிழ் சினிமாவிலும் என் திறமையை நிரூபிப்பேன். இருந்தாலும் நான் மனம் தளராமல் தொடர்ந்து, அத்தகைய வாய்ப்பை பெறுவதற்கு கடுமையாக உழைப்பதோடு, தொடர்ச்சியாக முயற்சித்தும் வருகிறேன் என்று கூறியவர், மற்ற மொழிகளில் எப்படி எனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி வில்லன் நடிகராக உயர்ந்தேனோ அதுபோல் நிச்சயம் தமிழ் சினிமாவிலும் எனக்கான அங்கீகாரத்தை பெறுவேன், என்று நம்பிக்கை தெரிவித்தார் சம்பத் ராம்.
இதையும் படிங்க: 70 வருட பழைய பட்டு புடவையில்... வின்டேஜ் லுக்கில் கலக்கும் பூஜா ஹெக்டே!