தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக விளங்கிய ஏ.வி.எம். நிறுவனம், இந்திய திரையுலகின் வரலாற்றில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. “ஏ.வி.எம்.” என சுருக்கமாக அழைக்கப்படும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், கருப்பு-வெள்ளை காலம் முதல் தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பம் காலம் வரை, 75 ஆண்டுகளில் 175 படங்களை தயாரித்து சாதனை படைத்தவர். இதன் மூலம், தமிழ் மற்றும் இந்திய திரையுலகில் நிரந்தரச் செல்வாக்கை நிறுவினார். ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 1934-ம் ஆண்டு கொல்கத்தாவில் “நியூ தியேட்டர்ஸ் ஸ்டூடியோ” மூலம் ‘அல்லி அர்ஜூனா’ படத்தை தயாரித்தார்.
தொடர்ந்து ‘ரத்னாவளி’ மற்றும் ‘நந்தகுமார்’ படங்களையும் தயாரித்தார், ஆனால் முதல் மூன்று படங்களும் வணிக ரீதியிலோ அல்லது விமர்சன ரீதியிலோ வெற்றி பெறவில்லை. தொடர் தோல்விகளால் மன அழுத்தத்தை சந்தித்த அவர், “நம்மிடம் ஸ்டூடியோ இல்லாததால் நம் விருப்பப்படி படம் எடுக்க முடியவில்லை. நாமே சென்னையில் ஸ்டூடியோ ஆரம்பித்து படம் எடுத்தால் என்ன?” என்ற முடிவுக்கு வந்தார். இதற்காக அதிக பொருள் செலவினம் ஏற்பட்டதால், சிலருடன் கூட்டணி அமைத்து 1940-ம் ஆண்டு பிரகதி ஸ்டூடியோவை சென்னையில் அடையாறில் தொடங்கினார். இதன் மூலம் ‘பூகைலாஸ்’, ‘வசந்தசேனா’, ‘வாயாடி’, ‘போலி பாஞ்சாலி’, ‘என் மனைவி’ போன்ற படங்களை தயாரித்தார். இப்படி இருக்க 1942-ம் ஆண்டு, ‘சபாபதி’ படத்தை இயக்கியதும், கன்னடத்தில் உருவான ‘ஹரிசந்திரா’ படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதும் இந்தியாவில் முதல் “டப்பிங்” படம் என்ற வரலாற்றில் இடம் பெற்றது.

1945-ம் ஆண்டு டி.ஆர். மகாலிங்கம், குமாரி ருக்மணி நடித்த ‘ஸ்ரீ வள்ளி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதன்பிறகு, 1945-ம் ஆண்டு சென்னையில் ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால், புதிய மின்சார இணைப்புகள் இல்லாததால், சொந்த ஊரான காரைக்குடியில் ஏ.வி.எம். ஸ்டூடியோ நிறுவப்பட்டது. 1947-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘நாம் இருவர்’ படத்தில் பாரதியார் பாடல்கள் இடம்பெற்று, மக்கள் மனதில் நீண்ட நேரம் பிரபலமாக இருந்தன. பின்னர், காரைக்குடி ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்றி, படப்பிடிப்புக்கான அனைத்து வசதிகளும் செய்து, அங்கு எடுத்த முதல் படம் ‘வாழ்க்கை’ (1949) வெள்ளி விழா படமாக அமைந்தது. அந்த காலத்தில் ஏ.வி.எம். நிறுவனம் நடிப்பு பல்கலைக்கழகமாக இருந்தது.
இதையும் படிங்க: #BREAKING கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சி... பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்...!
பல பிரபல நடிகர்கள் இங்கிருந்து உருவானனர்கள். டி.ஆர். மகாலிங்கம், சிவாஜி கணேசன், ராஜ்குமார், எஸ்.எஸ். ராஜேந்திரன், கமல்ஹாசன், வி.கே. ராமசாமி, சிவகுமார் மற்றும் நடிகைகள் வைஜெயந்திமாலா, குமாரி ருக்மணி, விஜயகுமாரி, குட்டி பத்மினி ஆகியோர். மேலும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மறைவுக்கு பிறகு, 1958-ம் ஆண்டு அவரது மகன் ஏ.வி.எம். சரவணன் நிறுவனம் வழிநடத்த தொடங்கினார். தந்தையின் பாதையைப் போலவே கடமையை உயிராக மதித்தவர். இவர் தயாரித்த ‘பராசக்தி’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘சர்வர் சுந்தரம்’, ‘முரட்டுக்காளை’, ‘அயன்’, ‘சிவாஜி’ போன்ற வெற்றிப் படங்கள் நிறுவனம் வளர்ச்சியை நிலைநிறுத்தின.

அத்துடன் தொழிலதிபர், ஸ்டூடியோ அதிபர், தயாரிப்பாளர் என்ற பன்முக வேடங்களில் இருந்தும், சரவணன் தன் ஸ்டூடியோவில் தொழிலாளியுடன் இணைந்து பணிபுரிந்தார். எந்த சிறப்பு நிகழ்ச்சிக்கும் அழைப்பில் தவறாமல் போய் வாழ்த்தியவர். ஒரே நாளில் பல விசேஷங்கள் வந்தாலும், ஏழை தொழிலாளி வீட்டிற்கான நிகழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்தார். “அவர்கள் நம்மை எதிர்பார்ப்பார்கள். அவர்கள் குடும்பத்தை ஏமாற்றக்கூடாது” என்ற கொள்கையை வழிமொழிந்தார். அவர் கோடம்பாக்கம் வழியாக சென்றால், கோவிலில் கும்பிட்டு, மசூதியில் வணங்கி, கிறிஸ்தவ தேவாலயத்தையும் பார்த்து கும்பிடுவார்.
அரசியல் தலைவர்களில் காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சோனியாகாந்தி ஆகியோருடன் பழகியவர். ஊடகங்களில் செய்தி வந்தால் உடனே நன்றி கடிதம் அனுப்பி வந்தார். அலுவலக மேஜையில் ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற வாசகம் இடப்பட்ட பலகை இருந்தது. நிகழ்ச்சிகளில் யாரோடு பேசினாலும் கையைக் கட்டிக்கொண்டு மரியாதை காட்டும் பணிவு, தொழிலாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு பாடமாக இருந்தது. இந்நிகழ்ச்சிகள், ஏ.வி.எம். நிறுவனத்தின் வரலாறையும், தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும், கலைஞர்களின் உருவாக்கத் திறனையும் வெளிப்படுத்துகின்றன.

ஏ.வி.எம். நிறுவனம் என்பது ஸ்டூடியோ அல்ல, இது இந்திய திரையுலகின் அடையாளமாகவும், கலாச்சார வளர்ச்சியின் மையமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் இன்று மறைந்த ஏ.வி.எம் சரவணனுக்கு பல அரசியல் பிரமுகர் முதல் திரை பிரபலங்களை வரை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒருவர் இறப்பு.. உங்களுக்கெல்லாம் காமெடியாக இருக்கா..! மீம்ஸ் கிரியேட்டர்களை வறுத்தெடுத்த நடிகை ஜான்விகபூர்..!