சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகர் தர்ஷன் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பரவி வந்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றன. கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தர்ஷனின் ஜாமீன் தொடர்பான விசாரணை நடைபெற்றபோது, நடிகை ரம்யா அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரம்யாவுக்கு எதிரான அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்கள் அதிகமாக வரத்தொடங்கின.
இதையடுத்து, ரம்யா கடந்த ஜூலை 28-ம் தேதி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் அவர்களிடம் நேரில் சென்று இந்த அவதூறு மற்றும் ஆபாசமான கருத்துக்கள் தொடர்பாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மத்திய மண்டல சைபர் கிரைம் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து 48 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். அதில் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் சமீபத்தில் விஜயாப்புரா மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சந்தோஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தோஷ், சமூக வலைதளங்களில் நடிகை ரம்யா குறித்து ஆபாசமான, அவதூறான கருத்துகள் மற்றும் பதிவுகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். விசாரணையின் போது, அவர் இந்த செய்திகளை தனியாகத் தயாரித்ததா அல்லது வேறு யாரிடமிருந்து தூண்டப்பட்டதா என்பதையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். விஜயாப்புராவில் இருந்து சந்தோஷை கைது செய்த போலீசார், அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம், சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தும் பிரச்சனையை மீண்டும் ஒரு முகப்படுத்துகிறது. தனி நபர்களை இலக்காகக் கொண்டு அவதூறு, அவமதிப்பு மற்றும் பாலியல் தொல்லை அளிக்கும் வகையில் கருத்துகளை பதிவிடும் நடவடிக்கைகள், சட்டப்படி குற்றமாகும் என்பதை போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வூட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், சமீபத்தில் வெளியான போலீஸ் அறிக்கையின் படி, இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் மொபைல் சாதனங்கள், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், மேலும் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 48 பேரின் பட்டியலில் இருந்து, விரைவில் மேலும் கைது நடவடிக்கைகள் நடக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்க தன்னிடம் பதிவான சைபர் தொல்லைகள் குறித்து ரம்யா, தனிப்பட்ட முறையில் வெளியிட்ட காணொளி ஒன்றில் கூறியிருந்தார். அதில், " நான் ஒரு பெண். என் கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக, இந்த அளவுக்கு தாக்குதல் நடத்தப்படுவது எனக்கே அச்சமாக இருக்கிறது. இது எல்லை மீறிய நடவடிக்கை. இதற்கு சட்டம் உரிய பதிலை கொடுக்கும் என்பதை நான் நம்புகிறேன்" என்றார். இந்த நிலையில், மத்திய மண்டல சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகளின் பேசுகையில், " இது ஒரு சமூக வலைதள வழித்தொடர்பில் தொடங்கிய நிலையில், இப்பொழுது இது சட்ட ரீதியான மிக முக்கிய வழக்காக உருவெடுத்து விட்டது. எந்தவொரு பெண் மீதும், அவர் பிரபலமானவர் என்றாலும், இல்லையெனினும், இந்த வகையான தாக்குதல்களை சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.. இதுபோன்ற தாக்குதல்களை செய்பவர்கள் சமூக ஊடகங்களில் முகமூடி போட்டு செயல்படுவதை நாங்கள் தவிர்க்க வில்லையென்று நினைக்க வேண்டாம். டிஜிட்டல் அடையாளங்கள் மூலம் அவர்கள் கண்டிப்பாகக் கண்டுபிடிக்கப்படுவர்" என்றும் தெரிவித்துள்ளனர். இப்படியாக நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த ஆதரவு, மற்றொரு நபரின் மதிப்பையும், மரியாதையையும் கெடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டால் அது கடுமையான சட்ட நடவடிக்கையை உருவாக்கும் என்பதை இந்த வழக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: பாகுபலிக்கு விரைவில் திருமணமா..! நடிகர் பிரபாஸ் உறவினர் வெளியிட்ட முக்கிய தகவல்..!
பலரும் சமூக ஊடகங்களில் தனது விருப்பங்களை பதிவு செய்யும் நிலையில், அதில் உள்ள பதட்டங்கள், நியாயம் மீறிய விமர்சனங்கள், வன்முறையை தூண்டும் பேச்சுக்கள் போன்றவை முக்கிய பிரச்சனைகளாக உருவாகியுள்ளன. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், காவல்துறை தொடர்ந்து சமூக ஊடக கண்காணிப்பு, அறிவூட்டும் பயிற்சிகள், நிகழ்ச்சிகளை நடத்துதல், தொலைபேசி மற்றும் இணைய வழி பாதுகாப்பு பரிசோதனை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை இணைய ஒழுக்கம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. 21 வயதான சந்தோஷின் கைது, இளம் வயதினரிடையே சமூக ஊடக ஒழுங்குமுறை பற்றிய அறியாமை எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அவர் ஒரு கட்டிட தொழிலாளி என்ற அடிப்படையில், வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். ஆனால், ஒரு மதிப்பில்லாத இணைய கருத்து இன்று அவரை அடிவாங்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது. ஆகவே சமூக ஊடகங்கள், சுதந்திரமான கருத்து பரிமாற்றத்திற்கான மேடையாக இருக்க வேண்டியது தான். ஆனால் அந்த சுதந்திரம், சட்டம், மரியாதை, மனித நேயம் ஆகிய எல்லைகளை மீறக்கூடாது என்பதையும், சட்டம் தன் பாதையை தவறாமல் செயல்படுத்தும் என்பதையும் இந்த வழக்கு மீண்டும் ஒருமுறை தெளிவாகச் சொல்கிறது.

ரம்யாவுக்கு எதிரான இணைய தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த வழக்கின் தொடர்ச்சி சமூகத்திற்கே ஒரு பாடமாக அமையும் என்ற நம்பிக்கையோடு காவல்துறை நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா...! "கூலி" படத்தை பார்த்து முதல் விமர்சனத்தை பதிவு செய்த உதயநிதி ஸ்டாலின்..!