சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்றாக செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சி உருவெடுத்துள்ளது. இதுவரை நடிப்பிலும், பொழுதுபோக்கிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வந்த பிரபலங்கள், தற்போது சமையல் களத்தில் இறங்கி தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சமையல் சவால்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், முதல் எலிமினேஷன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமான சமையல் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் மாஸ்டர் செஃப். ஆஸ்திரேலியா, பிரேசில், கொலம்பியா, கனடா, டென்மார்க் உள்ளிட்ட சுமார் 70 நாடுகளில் இந்த நிகழ்ச்சி பல்வேறு வடிவங்களில் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமையல் கலையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மட்டுமின்றி, பார்வையாளர்களுக்கும் புதுவிதமான அனுபவத்தை வழங்கும் இந்த நிகழ்ச்சி பல நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது தமிழிலும் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அடேய் அவரு வில்லண்டா..!! AI வீடியோவில் ட்ரெண்டாகும் ஆனந்த்ராஜ்,பொன்னம்பலம்.. நடிகர் வைத்த ரெக்வஸ்ட்..!

இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா செலிபிரிட்டி நடுவராக பங்கேற்று வருகிறார். அவருடன் பிரபல சமையல் கலைஞர்களான செஃப் வெங்கடேஷ் பட், செஃப் ஸ்ரீயா அட்கா மற்றும் செஃப் சசி செல்லையா ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். மிர்ச்சி விஜய் இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் ரேஷ்மி, RJ தீபக், பாலாஜி முருகதாஸ், அபி, மதிச்சியம் பாலா, தீனா, ரவி மரியா, வினோதினி, சித்தார்த்தா, சியாரா, ஜனனி அசோக் குமார் மற்றும் ஜூலி என மொத்தம் 12 பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கினர். கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொருவரும் தங்களது சமையல் திறமையை வெளிப்படுத்தி வந்தனர்.
இதற்கிடையே, கடந்த வாரம் RJ தீபக் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அது ஒரு பிராங்க் (Prank) என நடிகை சமந்தா அறிவித்தார். இதனால் அந்த வாரம் யாரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறவில்லை.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நிச்சயமாக ஒருவர் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன்படி, சிறப்பாக சமைத்த ரேஷ்மி, தீனா, ரவி மரியா, அபி, சியாரா மற்றும் சித்தார்த்தா ஆகிய ஆறு பேரும் பாதுகாப்பான இடமான Safe Zone-க்கு அனுப்பப்பட்டனர்.
மீதமிருந்த பாலாஜி முருகதாஸ், மதிச்சியம் பாலா, வினோதினி, RJ தீபக், ஜனனி அசோக் குமார் மற்றும் ஜூலி ஆகியோர் எலிமினேஷன் சுற்றில் போட்டியிட்டனர். இதில் ஜூலி தயாரித்த உணவு நடுவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் குறைவான மதிப்பெண்களைப் பெற்ற ஜூலி, செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறியுள்ளார்.

முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்ற அறிவிப்பால் தப்பித்த போட்டியாளர்கள், இந்த வாரம் உண்மையான வெளியேற்றத்தை சந்தித்துள்ளனர். ஜூலியின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இனிவரும் வாரங்களில் போட்டி இன்னும் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்ததாக யார் சிறப்பாக சமைத்து நடுவர்களின் பாராட்டுகளைப் பெறப்போகிறார்கள், யார் போட்டியிலிருந்து வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: காசா.. கல்யாணமா.. SK வாக்கு பளிச்சிடிச்சி..!! திருமணத்திற்காக ரூ.450 கோடி படத்தில் இருந்து விலகிய அனிருத்.!