பாலிவுட் திரையுலகில் ஸ்ரீதேவியின் மகளாக அறிமுகமான ஜான்வி கபூர், தனது அழகு, நவீன மின்னல் தோற்றம், நுட்பமான நடிப்புத் திறமை ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இந்த நிலையில், தென்னிந்திய திரையுலகிற்குள் ‘தேவரா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜான்வி, தற்போது அடுத்த அசத்தலான பட வாய்ப்பை தட்டிச் சென்றுள்ளார். அந்த படத்தில் தான், ராம் சரண் நடிக்கிறார். இவர்களது நடிப்பில் வெளியாகவுள்ள ‘பெத்தி’ திரைப்படம் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்குவதால், இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக, அவர் இயக்கிய ‘உப்பெனா’ திரைப்படம் வெற்றிகரமாக அமைந்ததோடு, கலாபாரம்பரிய பார்வையிலும் புகழ் பெற்றிருந்தது. இப்போது அவர், மெகா ஸ்டார் குடும்பத்தைச் சேர்ந்த ராம் சரணுடன் கூட்டணி அமைக்கிறார் என்ற செய்தி திரையுலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ‘தேவரா’ படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஜோடியாக நடித்த ஜான்வி கபூர், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அந்த படம் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த ஜான்வி, தற்போது அடுத்த படத்திற்கு தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அதன்படி, 'தேவரா' திரைப்படத்திற்காக ஜான்வி ரூ.5 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் ‘பெத்தி’ திரைப்படத்திற்காக, ரூ. 6 கோடி சம்பளமாக அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, ‘பெத்தி’ திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக கொண்ட ஒரு மிகுந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இது தமிழிலும், தெலுங்கிலும், ஹிந்தியிலும் ரிலீசாகும் பான் இந்தியா படம் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து, கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தென்னிந்திய திரையுலகில் ஒரு சக்திவாய்ந்த கலவையாக பார்க்கப்படுகிறது.

ஒரே படத்தில், தெலுங்கு, கன்னட, ஹிந்தி ரசிகர்களின் மனதைக் கவரும் நட்சத்திரங்கள் இணைந்திருப்பது இந்தப்படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரது இசை இப்படத்திற்கு ஒரு தனி தரம் சேர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ரஹ்மானின் இசை, எப்போதும் திரைப்படங்களை ஒரு பரிணாம நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பது பலரும் அறிந்த உண்மையே. இந்த திரைப்படத்தை மூன்று முக்கிய தயாரிப்பு நிறுவனங்களான சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சுகுமார் ரைட்டிங்ஸ் ஏற்கெனவே ‘புஷ்பா’, ‘ரங்கஸ்தலம்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஹிட் கொடுக்க இருக்கும் "சென்னை பைல்ஸ் முதல் பக்கம்"...! நடிகர் வெற்றியின் பேச்சு இணையத்தில் வைரல்..!
அதேபோல் மைத்ரி மூவீஸ் ‘தேவரா’, ‘புஷ்பா 2’ போன்ற மிகுந்த எதிர்பார்ப்புள்ள படங்களைத் தயாரித்து இருக்கிறது. இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவங்களின் கூட்டணி என்பது தான் ‘பெத்தி’க்கு கிடைக்கும் வரவேற்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இப்படிப்பட்ட, ‘பெத்தி’ படத்துடன், ஜான்வி கபூரின் தெலுங்கு சினிமா பயணம் ஒரே படியில் உயர்ந்து விட்டது என்றே கூறலாம். தற்போது அவர், தெலுங்கில் மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்ற இருக்கிறார். தெலுங்கில் ஜான்விக்கு உள்ள வரவேற்பு, பரவலாக பேசப்பட்டு வருகிறது. ‘பெத்தி’ திரைப்படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ, சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் ராம் சரண் ஒரு கிரிக்கெட் வீரராக இடம் பிடித்த காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. கிரிக்கெட், உணர்வுகள், சமூக வித்தியாசங்கள் ஆகியவற்றின் கலவைபோல் தெரியவந்தது. இப்படம், 2026-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ராம் சரணின் பிறந்த நாளையொட்டி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

‘பெத்தி’ திரைப்படம், ஒரு பக்கத்தில் வெற்றிகரமான இயக்குநர், மற்றொரு பக்கத்தில் பிரபல ஹீரோ, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் ஹீரோயின் ஜான்வி கபூர், மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இசை, சிவராஜ்குமார், மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பாளர்கள் என அனைத்தையும் ஒன்றாக கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: தனது கணவரை பிரிந்தாரா நடிகை ஹன்சிகா..! வேதனையை பகிர்ந்து வரும் பிரபலங்கள்..!