தமிழ் சினிமா உலகில் சிலர் நீண்ட காலம் போராடி தான் நட்சத்திரமாக மாறுவர். ஆனால் சிலர் தங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவர். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக தற்போது பேசப்பட்டு வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். ‘Love Today’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் எதிர்பார்த்த படி, அவரின் புதிய படம் ‘Dude’ திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படி இருக்க ‘Dude’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்திருக்கிறார் மமிதா பைஜு.
இருவரும் ஒரு நிகழ்ச்சி நிறுவனத்தை நடத்தும் நண்பர்களாக அறிமுகமாகின்றனர். அவர்களின் நிறுவனம் “Dude Events” என்ற பெயரில் செல்வாக்கு பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மமிதா ப்ரதீப் மீது மெதுவாக காதல் கொள்ள ஆரம்பிக்கிறார். ஆனால் இருவரும் மாமா-மாமி பிள்ளைகள் என்பதால், ப்ரதீப் அந்த உணர்வை ஏற்க முடியாது என்கிறார். “நான் உன்னை என் நண்பியாகத்தான் பார்க்கிறேன்” என்று சொல்லிய ப்ரதீப், அவரை மனமுடைந்தவளாக வெளிநாட்டிற்கு அனுப்பிவிடுகிறார். பின்பு மமிதா வெளிநாட்டில் மேல்படிப்பு முடித்து வரும்போது தான், ப்ரதீப் தன்னுடைய உண்மையான உணர்வை புரிந்துகொள்கிறார். அவருக்கு மமிதா மீதான காதல் பிறக்கிறது. பிறகு, அவர் மமிதாவின் தந்தையான சரத்குமாரிடம் சென்று நேராக திருமண கோரிக்கை வைக்கிறார். சரத்குமார் கதாபாத்திரம் ஒரு மாநில மந்திரி. அவரது மகளின் திருமணம் அரசியல் வட்டாரத்தில் பெரிய நிகழ்வாக மாறுகிறது. பிரபல அரசியல்வாதிகள், பிரபலங்கள் எல்லாம் கலந்துகொள்ளும் அந்த திருமண நாளில் தான் கதையில் பெரிய திருப்பம் வருகிறது.
திருமண மேடையில் மமிதா திடீரென “நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன்” என்று அறிவிக்கிறார். அதன்பிறகு நிகழும் நிகழ்வுகளே படத்தின் முக்கியக் கிளைமாக்ஸ். மமிதா உண்மையில் யாரை காதலிக்கிறார்?, அவரின் முடிவை ப்ரதீப் ஏற்றுக்கொண்டாரா?, அல்லது அவர் வாழ்க்கையில் நடந்த மாற்றம் என்ன? — என்பதே படத்தின் மீதிக் கதை. படத்தின் முதல் பாதி முழுக்க கலாட்டா, காமெடி, ரொமான்ஸ் என ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து அளிக்கிறது.
ப்ரதீப் – மமிதா ஜோடி இருவரின் கெமிஸ்ட்ரி அருமை. சிறப்பாக திருமண காட்சிகளின் போது வரும் டயலாக்கள், குடும்ப கலாட்டாக்கள், ப்ரீ-இன்டர்வெல் பில்ட்அப் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. அதில் முக்கியமாக ப்ரதீப் பேசும் “ஆணவக் கொலைக்கு எதிராக” வரும் வசனம் சமூக ரீதியாக பாராட்டத்தக்க ஒன்று. இது இன்றைய தலைமுறையின் குரலை பிரதிபலிக்கிறது. “இது தான் ப்ரதீப் ரங்கநாதனின் ஸ்டைல்” என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: '18+' ஷோவாக மாறும் 'பிக்பாஸ் சீசன் 9' ..! கடிவாளம் போட வைல்டுகார்டில் புது என்ட்ரி.. ஷாக் கொடுக்கும் அப்டேட்..!

முதல் பாதியில் படம் மிகச்சுறுசுறுப்பாக ஓடுகிறது என்பதில் இருபுறமும் ஒருமித்த கருத்து. முதல் பாதி முடிந்ததும், இரண்டாம் பாதியில் கதை மெதுவாக மாறுகிறது. ஒரே இடத்தில் நிகழ்வுகள் நீளும் போது சுவாரஸ்யம் சிறிது குறைகிறது. ப்ரதீப் – மமிதா உறவில் ஏற்படும் மாற்றங்கள் கொஞ்சம் பிழையில்லாமல் எழுதப்பட்டிருந்தாலும், திரைக்கதை திசைமாறியதாக சில விமர்சனங்கள் கூறுகின்றன. படம் உணர்ச்சிகரமாக முடிந்தாலும், இரண்டாம் பாதி முதல் பாதியின் ஆற்றலை அளிக்கவில்லை என்பது உண்மை. அந்த இடைவெளியை சாயின் பின்னணி இசை நன்றாக நிரப்புகிறது. சாய் அபயங்கர் வழங்கிய பின்னணி இசை மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக “வந்தனம்” பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இணையத்தில் ரசிகர்கள் “2K கிட்ஸ் நஷனல் ஆன்தம் இதுதான்” எனக் கூறி மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர். ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆர்ட் டைரெக்ஷன் ஆகிய அனைத்தும் தரமான அளவில் உள்ளன.
தொழில்நுட்ப ரீதியாக படம் “வழுவற்றது” என கூறலாம். ‘Dude’ படத்தின் பலம் ப்ரதீப் ரங்கநாதனின் திரை நடிப்பு தான். அவரின் நகைச்சுவை டைமிங், உணர்ச்சி வெளிப்பாடு, ப்ரெஸன்ஸ் அனைத்தும் மெருகாக வெளிப்பட்டுள்ளன. “அவரின் டயலாக் டெலிவரி முறை தன்னிச்சையாக ஈர்க்கிறது” என்று சினிமா விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். மமிதா பைஜு தனது க்யூட் எக்ஸ்பிரஷன்களால் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்துள்ளார். சரத்குமார் வழக்கம்போல தன்னுடைய பெருமிதமான காட்சிகளால் மெருகூட்டியுள்ளார். க்ளாப்ஸ் என பார்த்தால், ப்ரதீப் ஒன் மேன் ஷோ, மமிதா – ப்ரதீப் கெமிஸ்ட்ரி, சமூக கருத்தை மையமாகக் கொண்ட வசனங்கள், இசை, ஒளிப்பதிவு, தொழில்நுட்பம் எனலாம். அதுவே ப்ளாப்ஸ் எனப்பார்த்தல் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் குறைவு, திரைக்கதை திசை மாறும் சில தருணங்கள் தான்.

மொத்தத்தில், முதல் பாதியில் பார்வையாளர்களை சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் ‘Dude’, இரண்டாம் பாதியில் சற்றே மந்தமடைந்தாலும், அதன் சமூக கருத்து மற்றும் யூத் கனெக்ஷன் காரணமாக பாராட்டத்தக்க படம். ப்ரதீப் ரங்கநாதன் “Love Today”க்கு பிறகு மீண்டும் ஒரு ஹாட்ரிக் வெற்றி அடைந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர். சில குறைகள் இருந்தாலும், “சொல்ல வந்த விஷயம் முக்கியம்” என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இதுவே. ஆகவே “இந்த Dude, ஒரு டீசென்ட் ஹிட் — டீப் மெசேஜ் கொண்ட ஹைஃபை ரொமான்டிக் எண்டர்டெயினர்”. எனவே கண்டிப்பாக அனைவரும் படத்தை தைரியமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: கல்யாணம் முடிந்த கையுடன் பிறந்த நாளா..! 33-வது வயதை எட்டிய கீர்த்தி சுரேஷுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!