உலகின் மிகப் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றான லண்டன் லெஸ்டர் சதுக்கம், சமீபத்தில் இந்திய சினிமாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மைல்கல்லை உருவாக்கும் நிகழ்விற்குச் சாட்சியாக அமைந்தது. உலகத் திரைப்பட வரலாற்றில் அழியாப் புகழை பதித்த இந்திய ஹிந்தி திரைப்படமான ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (DDLJ) படத்தில் ஷாருக்கான் – கஜோல் ஆகியோர் நடித்த ராஜ்–சிம்ரன் ஜோடியின் வெண்கல சிற்பம் இங்கு அற்புதமாக நிறுவப்பட்டுள்ளது.
லெஸ்டர் சதுக்கத்தில் பல தசாப்தங்களாக “Scenes in the Square” என்ற தலைப்பில் உலகப் புகழ்பெற்ற திரைப்படக் கதாபாத்திரங்களின் சிற்பங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இங்கு உள்ள சில முக்கியமான சிலைகள், ஹாரி பாட்டர், பேட்மேன், மிஸ்டர் பீன், மேரிலின் மன்றோ, லாரல் & ஹார்டி, பாடிங்டன் கரடி, வண்டர் வுமன் போன்றவை. இந்த பிரபல பட்டியலில் இந்திய சினிமா முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது என்பது மிகப் பெரிய சாதனை. உலகின் முக்கிய திரைப்படங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் இந்த மேடையில், DDLJ படத்தைச் சேர்ந்த சிலை நிறுவப்படுதல் இந்திய திரைப்பட வரலாற்றில் வரலாற்றுச் சாதனை எனப் பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்க லண்டன் நகரத்தின் இதயப்பகுதியான இந்த சதுக்கத்தில் நிறுவப்படும் முதல் இந்திய திரைப்பட உலோகச் சிலை என்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் DDLJ படத்தின் மிகவும் பிரபலமான போஸை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கலாச்சார ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக, இந்திய பாரம்பரியமும் நவீனத்துவமும் கலந்த அழகிய கலைச் சிற்பமாக இது அமைந்துள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை ஒட்டி நடத்தப்பட்ட சிறப்பு விழாவில் ஹிந்தி திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் கஜோல் ஆகியோர் நேரடியாக பங்கேற்றனர்.
இதையும் படிங்க: டீசென்ட்-ல அப்பா டாப்பு.. இன்-டீசன்ட்ல பையன் பிளாப்பு..! ரசிகர்களுக்கு ஆபாச செய்கை.. சிக்கிய ஷாருக்கானின் மகன்..!
இந்த நிகழ்வில் இருவருமே உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் பேசுகையில், “DDLJ எங்கள் வாழ்க்கையை மாற்றிய படம். இன்று லண்டனின் இதயத்தில் நாங்கள் நடித்த கதாபாத்திரங்கள் நிரந்தரமாக நிற்பது ஒரு கனவு நனவாகியது” என்றார். அதேபோல் கஜோல் பேசுகையில், “இந்த படம் எங்களை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது. இங்கு ரசிகர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படத்திலும் இந்திய சினிமாவின் கண்ணியம் பெருகுகிறது” என்றார்.

குறிப்பாக 1995-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரூ.4 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் அது அசுர வளர்ச்சியுடன் ரூ.102 கோடி வருமானத்தை எட்டியது. இந்திய சினிமாவில் அப்போது இது ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அத்துடன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை மராத்தா மந்திர் திரையரங்கில் தினமும் ஒரு ஷோ ஓடிக்கொண்டிருக்கிற ஒரே இந்தியப் படம் இதுதான். இப்போது படம் தனது 30-ம் ஆண்டு கொண்டாட்டத்தை நிறைவு செய்துள்ளதால், இந்த சாதனையை போற்றும் வகையில் லெஸ்டர் சதுக்கத்தில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் லெஸ்டர் சதுக்கத்தில் உள்ள மற்ற உலக நட்சத்திரங்களின் பட்டியலில் இந்திய நட்சத்திர ஜோடி இணைக்கப்படுவது, இந்திய திரைப்பட தொழிலின் உலகளாவிய செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது. இது இந்திய கலாச்சாரம், இசை, காதல் கதைகள் அனைத்தும் உலக பார்வையாளர்களிடம் எவ்வளவு தாக்கம் செலுத்தியுள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது. லெஸ்டர் சதுக்கம் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது. ஹாரி பாட்டர் முதல் மிஸ்டர் பீன் வரை புகழ்பெற்ற கதாநாயகர்களின் சிலைகளோடு இன்று DDLJ-இன் ராஜ்–சிம்ரன் ஜோடியும் நின்று கொண்டிருப்பது, இந்தியர்கள் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களையும் கவரும்.

ஆகவே இந்த வெண்கலச் சிலை இந்திய சினிமாவின் உலக அரங்கில் உயர்வு அடைந்ததற்கான மிகப் பெரிய அடையாளமாகத் திகழ்கிறது. DDLJ படம் மூன்று தசாப்தங்களாக ரசிகர்களின் மனதை கவர்ந்தது; அப்படியே அடுத்த தலைமுறையினருக்கும் இந்தச் சிலை அதன் அழியாத மாயத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
இதையும் படிங்க: அழகியே.. Marry me...! சீரியலில் சிம்பிளா இருந்த ஹசின்-ஆ.. இப்படி சேலையில் கவர்ச்சியா இருக்காங்க..!