தமிழ் மட்டுமல்லாது அனைத்து மொழி சார்ந்த படங்களை தயாரிக்க அவுட்டோர் யூனிட் என்பது மிகவும் முக்கியம். அவை இல்லையென்றால் சினிமாவில் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை உள்ளது. இப்படி இருக்க, கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெப்சி அமைப்புக்கும் மோதல் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு செல்லும் பெப்சி அமைப்பினர் பல அராஜக செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் 'இனி எந்த படப்பிடிப்புக்கும் நாங்கள் செல்ல மாட்டோம்' என்று தென்னிந்திய சினிமா மற்றும் டிவி அவுட்டோர் யூனிட் யூனியன் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவுட்டோர் யூனிட் என்பது கேமரா, லைட்ஸ், ஜெனரேட்டர், ஜிம்மி, பேந்தர், கிரிப்ஸ் மற்றும் ஒளிப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு கொடுக்கும் நிறுவனங்களின் முதலாளி அமைப்பாகும்.
தொழிலாளர் சம்மேளத்தின் நிர்வாகிகளாக ஆர்.கே.செல்வமணி, சுவாமிநாதன் ஆகியோர் வந்தபின் 6 ஆண்டுகளாக எங்கள் அவுட்டோர் யூனிட்டுக்கு மட்டும் தொழில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், வெளிமாநில அவுட்டோர் யூனிட்டுகளை தமிழகத்துக்கு வரவழைத்து தொழில் செய்வதற்கு அவர்கள் இருவரும் உறுதுணையாய் செயல்பட்டனர்.
இதையும் படிங்க: மகனை இழந்த பாரதிராஜா..! இதற்கு அடிமையாவார் என நினைக்கவில்லை - சகோதரர் ஜெயராஜ் வேதனை..!

தமிழ் என்றும் தமிழர்களின் வேலைக்காக மட்டுமே பாடுபடுபவர்கள் என்றும் கூறும் அவர்கள் தமிழகத்தில் மட்டுமே தொழில் செய்யும் தமிழர்களான எங்களுக்கு தொழில் இழப்பை ஏற்படுத்தியதோடு, இங்குள்ள பெப்சி தொழிலாளருக்கும் வேலை இழப்பை தங்களது சுயலாபத்துக்காக ஏற்படுத்திவிட்டனர். இதை கட்டுப்படுத்த பலகட்ட சந்திப்புகள், கூட்டங்கள் நடத்தியும் இன்றுவரை அதற்கான தீர்வு காணப்படவில்லை.

தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும், ஏற்பட்ட மோதலினால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், புதிய தொழிலாளர் சங்கம் உருவாக ஒத்துழைப்பு கொடுக்கிறது. தயாரிப்பாளர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளில் அவர்கள் வேண்டுகோள் வைக்கும் போது நாங்களும் அதை ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கிறது.
இதை பொருத்துக்கொள்ளாத பெப்சி தலைமை, லைட்மேன் சங்கத்தை எங்கள் தொழிலுக்கு எதிராக தூண்டிவிட்டு படப்பிடிப்புக்கு உபகரணங்கள் செல்ல விடாமல் தடுக்கிறார்கள். நாங்கள் வேலை செய்யும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்று கலாட்டா செய்திருக்கிறார்கள். பொருட்களை அடித்து சேதப்படுத்தி உள்ளார்கள். இதற்கெல்லாம் காரணமான பெப்ஸி நிர்வாகம் என்ன சொல்ல போகிறது.

திரைத்துறையில் உள்ள அனைவரும் தாங்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு பெப்ஸி நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்களால் சுதந்திரமாக தொழில் செய்ய முடியவில்லை. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே, எங்களது அவுட்டோர் யூனிட் அசோசியேஷன், உபகரணங்களை படப்பிடிப்புகளுக்கு அனுப்புவதில்லை என்கிற தவிர்க்க முடியாத முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் சினிமா, தொலைக்காட்சி, வெப் சீரியஸ், விளம்பர படங்கள் எதற்கும் எங்களின் அவுட்டோர் யூனிட் பொருட்களை அனுப்ப மாட்டோம். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சங்க நிர்வாகிகளும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இதனை பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா சங்கத்தினர் தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீண்ட நாள் ஆசையை சொன்ன அனிகா சுரேந்திரன்..! என் கனவு எல்லாம் வீணாக போனது என கதறல்..!