2024-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் மொத்தம் 10 விருதுகளை வென்றதைத் தொடர்ந்து, தேசிய விருது பெற்ற கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கு தமிழக முதல்வர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தி தமிழ் திரையுலகினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “10 தேசிய திரைப்பட விருதுகளை தமிழ்த் திரையுலகம் வென்றிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமைக்குரிய தருணம். இந்த விருதுகளை பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வருங்காலங்களிலும் தமிழ்த் திரையுலகம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேலும் பல விருதுகளை பெற்று புதிய சாதனைகள் படைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த படத்தொகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றது.
இதையும் படிங்க: இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!! பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை பெற்றதுடன், அவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும், அவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சமூக மாற்றத்திற்கான சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் தேசிய விருதைப் பெற்றது.
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் சிறந்த சண்டைப் பயிற்சி மற்றும் சிறந்த துணை நடிகைக்கான இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது. மெய்யழகன் திரைப்படம் சிறந்த ஒலிக்கலவை விருதையும், ப்ளூ குறும்படம் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது.
மொத்தம் 10 தேசிய விருதுகளை தமிழ் திரையுலகம் வென்றிருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜயின் வாழ்த்து செய்தியும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!