புதுடெல்லி: உலகச் சந்தையில் தங்கம், வெள்ளிக்கு அடுத்தபடியாக காப்பர் (செம்பு) மிகவும் கவனிக்கப்படும் உலோகமாக மாறியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக காப்பர் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் லண்டன் உலோகச் சந்தையில் காப்பர் விலை 42 சதவீதம் உயர்ந்து, ஒரு டன் 12,522 டாலராக வர்த்தகமானது. இந்தியாவில் எம்.சி.எக்ஸ் சந்தையில் ஒரு கிலோ காப்பர் விலை 800 ரூபாயில் இருந்து 1,300 ரூபாயை எட்டியுள்ளது. ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 60 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது
காப்பர் விலை உயர்வுக்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முதலாவதாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகெங்கும் பிரமாண்ட டேட்டா சென்டர்கள் அமைக்கப்படுகின்றன. இந்த மையங்களில் மின்சாரத்தை கடத்துவதற்கும் குளிரூட்டும் அமைப்புகளுக்கும் டன் கணக்கில் காப்பர் தேவைப்படுகிறது.
இதையும் படிங்க: தடாலென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??
இரண்டாவதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக உலகம் மின்சார வாகனங்களை நோக்கி நகர்கிறது. ஒரு சாதாரண பெட்ரோல் காரைவிட மின்சார வாகனத்துக்கு 4 முதல் 5 மடங்கு அதிக காப்பர் தேவைப்படுகிறது. மூன்றாவதாக, சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலும் காப்பர் அதிக அளவில் பயன்படுகிறது.

நான்காவதாக, தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி போதுமான அளவு உயரவில்லை. இந்தோனேஷியா, சிலி, காங்கோ போன்ற நாடுகளில் உள்ள சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
புதிய சுரங்கங்கள் அமைப்பதில் உள்ள சிக்கல்களும் உற்பத்தி தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகள் காப்பர் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது.
இந்த விலை உயர்வு இந்தியாவில் மின்சார ஒயர்கள், விசிறிகள், ஏர் கண்டிஷனர்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்துஸ்தான் காப்பர் போன்ற நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை அளித்துள்ளன. நிபுணர்கள் கணிப்புப்படி, காப்பர் விலை குறைய வாய்ப்பு மிகக் குறைவு. அடுத்த சில ஆண்டுகளில் ஒரு டன் 15,000 டாலர் வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் சாதாரண உலோகமாக பார்க்கப்பட்ட காப்பர், இன்று டிஜிட்டல் மற்றும் எரிசக்தி துறையின் தவிர்க்க முடியாத பொருளாக மாறி “புதிய தங்கம்” என்று அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம் விலை..!! மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டிய ஒரு சவரன்..!!